Published : 27 Sep 2025 04:43 PM
Last Updated : 27 Sep 2025 04:43 PM
ஜார்சுகுடா: “காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களில் எல்லாம் மக்களை கொள்ளையடிக்கிறார்கள். மத்திய அரசு வழங்கும் ஜிஎஸ்டி வரி குறைப்பு உள்ளிட்ட நிவாரணங்கள் மக்களை சென்றடைய விடாமல், காங்கிரஸ் அரசு இடையில் ஒரு சுவர் போல நின்று தடுக்கிறது” என பிரதமர் மோடி தெரிவித்தார்.
ஒடிசா மாநிலம் ஜார்சுகுடாவில் நடந்த பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “ காங்கிரஸ் என் மீது அனைத்து வகையான அவதூறுகளையும் வீசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளது. ஜிஎஸ்டி விகிதங்களை நாங்கள் குறைத்தபோது, நாடு முழுவதும் பல்வேறு பொருட்களின் விலைகள் குறைந்தன. ஆனால் காங்கிரஸ் இந்த நிவாரணத்தை சாதாரண மக்களுக்கு வழங்க விரும்பவில்லை.
இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் அரசு ஆட்சியில் உள்ளது. முன்னதாக, நாங்கள் டீசல் மற்றும் பெட்ரோல் விலைகளை குறைத்தபோது, காங்கிரஸ் அரசுகள் இருந்த மாநிலங்களில், அவர்கள் அங்கு டீசல் மற்றும் பெட்ரோல் மீது கூடுதல் வரியை விதித்தனர். இதனால் அம்மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலைகளை குறைக்காமல், அப்படியே வைத்திருந்து தங்கள் சொந்த கஜானாவை நிரப்பினர்.
இப்போது ஜிஎஸ்டி வரியை குறைத்து, எங்கள் அரசு சிமெண்ட் விலையைக் குறைத்தபோது, இமாச்சலில் உள்ள காங்கிரஸ் அரசு மேலும் கூடுதல் வரியை விதித்தது. இதனால் இமாச்சலில் சிமெண்ட் விலை குறையவில்லை. மத்திய அரசு வழங்கும் ஜிஎஸ்டி வரி குறைப்பு உள்ளிட்ட நிவாரணங்கள் மக்களை சென்றடைய விடாமல், காங்கிரஸ் அரசு இடையில் ஒரு சுவர் போல நின்று தடுக்கிறது. காங்கிரஸ் அரசு எங்கு ஆட்சி செய்தாலும், அது அங்குள்ள மக்களைக் கொள்ளையடிக்கும்.
நாட்டில் முன்பு நிலைமை எப்படி இருந்தது என்பது உங்களுக்குத் தெரியும். முந்தைய காங்கிரஸ் அரசு மக்களை எப்போதும் கொள்ளையடித்துக் கொண்டே இருந்தது. 2014 ஆம் ஆண்டில், நீங்கள் எங்களைத் தேர்ந்தெடுத்த பின்னர், காங்கிரஸின் கொள்ளைகளிலிருந்து நாங்கள் உங்களை விடுவித்தோம். பாஜக அரசாங்கத்தின் கீழ், இரட்டை சேமிப்பு மற்றும் இரட்டை வருமானத்தின் சகாப்தம் தொடங்கிவிட்டது.” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT