Published : 27 Sep 2025 09:49 AM
Last Updated : 27 Sep 2025 09:49 AM
புதுடெல்லி: போலி என்கவுன்ட்டர் என புகார் அளிக்கப்பட்டதால், மாவோயிஸ்ட் கமாண்டர் கதா ராமசந்திர ரெட்டியின் உடலை பாதுகாத்து வைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சத்தீஸ்கரின் நாராயண்பூர் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் கடந்த 22-ம் தேதி நடத்திய என்கவுன்ட்டரில் 2 மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டனர். இவர்களில் ஒருவர் கமாண்டர் கதா ராமசந்திர ரெட்டி. ஆனால், போலி என்கவுன்ட்டரில் தனது தந்தை கொல்லப்பட்டதாக கதா ராமசந்திர ரெட்டியின் மகன் ராஜ சந்திரா குற்றம்சாட்டினார்.
இது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என சத்தீஸ்கர் உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார். ஆனால் பண்டிகை விடுமுறை காரணமாக, அங்கு அவரது மனு அவசரமாக விசாரிக்கப்படவில்லை. இதனால் உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தார். இவரது மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் திபாங்கர் தத்தா, ஏ.ஜி.மாசிஹ் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, கதா ராமசந்திர ரெட்டி உடல் மட்டும் மருத்துவமனையில் உள்ளது. பிரேதப் பரிசோதனை வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் போலீஸார் மீது குற்றம் சுமத்த முடியாது” என்றார். இதையடுத்து இந்த விஷயத்தில் சத்தீஸ்கர் நீதிமன்றம் முடிவு எடுக்கும்வரை, கதா ராமசந்திர ரெட்டியின் உடலை எரிக்காமல் பாதுகாத்து வைக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT