Published : 27 Sep 2025 09:31 AM
Last Updated : 27 Sep 2025 09:31 AM
புதுடெல்லி: உ.பி. அயோத்தியில் இருந்து 3 முறை எம்.பி.யாக இருந்தவர் பாஜக மூத்த தலைவர் வினய் கட்டியார். அயோத்தி ராமர் கோயிலில் தரிசனம் செய்த அவர் செய்தியாளர் கூட்டத்தில் முஸ்லிம்களை அச்சுறுத்தும் வகையில் பேசியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “அயோத்தியில் வசிக்கும் முஸ்லிம்களுக்கு இனி இங்கு தங்க உரிமை இல்லை. அவர்கள் விரைவில் வெளியேற வேண்டும். அண்டை மாவட்டங்களான கோண்டா மற்றும் பஸ்திக்கு செல்ல வேண்டும். அப்போதுதான் அயோத்தியில் இந்துக்கள் முழு உற்சாகத்துடன் தீபாவளியைக் கொண்டாடுவோம். பாபர் மசூதி அல்லது வேறு எந்த மசூதிக்கும் பதிலாக புதிய மசூதி அயோத்தியில் கட்ட அனுமதிக்கப்படாது” என்று தெரிவித்துள்ளார்.
அவரது இந்தப் பேச்சு, இந்திய சட்டத்தின் கீழ் வெறுப்புப் பேச்சு குற்றமாகக் கருதப்படுகிறது. இருப்பினும், அவர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
உ.பி.யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு மற்றும் கட்சியினர் கட்டியாரின் இந்த கருத்துக்கு அமைதி காக்கின்றனர். உச்ச நீதிமன்றத்தின் 2019 தீர்ப்பின்படி அயோத்தியில் இடிக்கப்பட்ட பாபர் மசூதிக்கு பதிலாக புதிய மசூதி கட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதையும் வினய் கட்டியார் எதிர்த்து வருகிறார்.
கட்டியார் நீண்ட காலமாக ராம ஜென்மபூமி இயக்கத்துடன் தொடர்புடையவர். 1984-ல் விஸ்வ இந்து பரிஷத்தின் இளைஞர் பிரிவான பஜ்ரங் தளத்தை நிறுவிய அவர், ராமர் கோயில் கட்டும் பிரச்சாரத்தில் முக்கிய பங்கு வகித்தார்.
கடந்த 2006, 2012-ம் ஆண்டுகளில் மாநிலங்களவை எம்.பி.யாகவும் இருந்தார். 1992-ல் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இவர் முக்கிய குற்றவாளிகளில் ஒருவராக இருந்தார். சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 2020-ம் ஆண்டில் அவர் உட்பட 32 பேரை விடுவித்தது நினைவுகூரத்தக்கது.வினய் கட்டியார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT