Published : 27 Sep 2025 09:01 AM
Last Updated : 27 Sep 2025 09:01 AM
பாட்னா: பிஹார் மாநிலத்தில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ், பிஹாரில் தனிக் கட்சி தொடங்கி உள்ளார். தனது கட்சிக்கு ‘ஜன் சக்தி ஜனதா தளம்’ என்று தேஜ் பிரதாப் பெயர் சூட்டியுள்ளார். கட்சியின் சின்னமாக ‘கரும்பலகை’ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
ஆர்ஜேடி நிறுவனர் லாலு பிரசாத்தின் மூத்த மகன் தேஜ் பிரதாப். காங்கிரஸ், ஆர்ஜேடி கூட்டணி ஆதரவுடன் நிதிஷ் குமார் முதல்வராக இருந்த போது, கடந்த 2015 முதல் 2017-ம் ஆண்டு தேஜ் பிரதாப் கேபினட் அமைச்சராக இருந்தார். இவரது மனைவி ஐஸ்வர்யா ராயுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பிரிந்து வாழ்கிறார். இவர்களது விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ளது.
இதற்கிடையில், கடந்த மே மாதம் தேஜ் பிரதாப் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட ஒரு பதிவில், அனுஷ்கா என்ற பெண்ணுடன் சேர்ந்து வாழ்வதாக கூறியிருந்தார். பின்னர் அந்தப் பதிவை தேஜ் பிரதாப் நீக்கிவிட்டார். எனினும், குடும்ப கவுரவத்தை மதிக்கவில்லை என்று கூறி தேஜ் பிரதாப்பை ஆர்ஜேடி கட்சியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்குவதாக லாலு பிரசாத் அறிவித்தார். இந்நிலையில், தேஜ் பிரதாப் தனிக் கட்சி தொடங்கி உள்ளது பிஹார் அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT