Published : 27 Sep 2025 08:54 AM
Last Updated : 27 Sep 2025 08:54 AM
புதுடெல்லி: பேரியம் நைட்ரேட் போன்ற வேதிப்பொருட்கள் பட்டாசு தயாரிப்பில் பயன்படுத்துவதால் உடல் நலனுக்கும், சுற்றுச்சூழலுக்கும் கேடு ஏற்படுவதாகத் தெரிவித்து அவற்றைத் தடை செய்யக் கோரி அர்ஜுன் கோபால் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், பசுமை பட்டாசுகளை மட்டுமே தயாரிக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கியது.
இதனிடையே பட்டாசு வெடிப்பதற்குத் தடை விதிக்கக் கோரி அர்ஜுன் கோபால் தாக்கல் செய்த மற்றொரு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், பட்டாசு விற்பனைக்கும், வெடிப்பதற்கும் தேசிய தலைநகரப் பகுதிகளில்(என்சிஆர்) கடந்த 2024-ம் ஆண்டு தடை விதித்தது. இதனால் பட்டாசு தொழிலை மட்டுமே நம்பியுள்ள லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி பட்டாசு தயாரிப்பு நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமயிலான அமர்வு நேற்று மீண்டும் விசாரித்தது.
பட்டாசு தயாரிப்பாளர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் கே. பரமேஷ்வர், பல்வீர் சிங் ஆகியோர் ஆஜராகி, டெல்லி என்சிஆர் பகுதிகளில் பட்டாசுக்கு விதிக்கப்பட்ட தடையால் பட்டாசு தொழிலை நம்பியுள்ளவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, பட்டாசு தயாரிப்புக்கு அனுமதிக்க வேண்டும். அர்ஜுன் கோபால் வழக்கில் விதித்த நிபந்தனைகளைப் பின்பற்றிப் பசுமை பட்டாசுகளைத் தயாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று வாதிட்டனர்.
மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பட்டி, பட்டாசு வெடிக்க நாடு முழுவதும் தடை விதிக்குமாறு மத்திய அரசு ஆலோசனை தெரிவிக்கவில்லை. இதைச் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் காண முடியும் என வாதிட்டார்.
இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்துக்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் அப்ராஜிதா சிங், இதற்கு ஆட்சேபம் தெரிவித்துடன், பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்ட தடையைத் தளர்த்தக்கூடாது. தடை விதித்திருக்கும்போதே, தடையில்லாத நிலை போல உள்ளது. தடையைத் தளர்த்தினால் கட்டவிழ்த்து விட்டதாகிவிடும் என்று வாதிட்டார்.
வழக்கறிஞரின் வாதங்களுக்குப் பிறகு தலைமை நீதிபதி கூறும் போது, “தடையை மீறி பட்டாசுகளை விற்போரின் உரிமங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் அனைவரும் ஏற்கும்படியான தீர்வை எட்ட உரியவர்களுடன் மத்திய ஆலோசனை நடத்தி தகவல் தெரிவிக்க வேண்டும்.
அதுவரை டெல்லி என்சிஆர் பகுதிகளில் பசுமை பட்டாசுகளைத் தயாரிக்க அனுமதிக்கப்படுகிறது. ஆனால் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரைவிற்பனை செய்யக் கூடாது” என்று உத்தரவிட்டார். வழக்கின் விசாரணை அக்டோபர் 8-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT