Last Updated : 26 Sep, 2025 07:15 PM

 

Published : 26 Sep 2025 07:15 PM
Last Updated : 26 Sep 2025 07:15 PM

ஜனவரியில் இருந்து 2,417 இந்தியர்களை அமெரிக்கா நாடு கடத்தியதாக மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: கடந்த ஜனவரியில் இருந்து அமெரிக்கா 2,417 இந்தியர்களை நாடு கடத்தி இருக்கிறது என இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ரந்திர் ஜெய்ஸ்வால், "இந்தியர்கள் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்குச் செல்வதை எதிர்ப்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. அதேநேரத்தில், சட்டப்பூர்வமாக வெளிநாடுகளுக்குச் செல்வதை அரசு ஊக்குவிக்கிறது. கடந்த ஜனவரியில் இருந்து அமெரிக்கா 2,417 இந்தியர்களை இந்தியாவுக்கு நாடு கடத்தி இருக்கிறது அல்லது திருப்பி அனுப்பி இருக்கிறது.

சட்டவிரோதமாக இந்தியர்கள் தங்கள் நாட்டில் இருப்பதாக ஒரு நாடு கூறுமேயானால், நாங்கள் அத்தகைய நபர்களின் ஆவணங்களைச் சரிபார்க்கிறோம். சட்டப்பூர்வமற்ற முறையில் இந்தியர்கள் வெளிநாடுகளில் தங்கி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டால் அவர்களை திரும்ப அழைத்துக்கொள்கிறோம்.

சட்டவிரோத இடப்பெயர்வு, சட்டப்பூர்வமான இடப்பெயர்வுக்கான அரசின் முயற்சியை பலவீனப்படுத்துகிறது. எனவே, சட்டவிரோத இடப்பெயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு, மாநில அரசுகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறது. சட்டப்பூர்வ குடியேற்றம் குறித்து நாங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். தென்கிழக்கு ஆசிய நாடுகளின் வேலைவாய்ப்புகளில் இருந்து விலகி இருக்குமாறு நாங்கள் இந்தியர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி வருகிறோம்.

சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியிருப்போர் விவகாரத்தில், நாங்கள் அமெரிக்க அரசுடன் நெருக்கமாக ஒத்துழைத்து வருகிறோம். தேசியத்தை உறுதிப்படுத்திய உடன் அவர்களை நாங்கள் திரும்ப அழைத்துக்கொள்கிறோம். அவ்வாறு இந்தியா திரும்பிய இந்தியர்களில் 62 சதவீதம் பேர் வணிக விமானங்களில் வந்துள்ளனர்.

வெளிநாடுகளில் உள்ள இந்திய மணவர்களின் நலன்களுக்கு மத்திய அரசு மிகுந்த முன்னுரிமை அளித்து வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் புதுப்பிக்கப்பட்ட விசா முறைகள் குறித்து நாங்கள் மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். விசா வழங்குவது என்பது இறையாண்மை தொடர்புடைய ஒன்று என்பதை நாங்கள் அறிவோம். இந்திய மாணவர்களின் விண்ணப்பம் தகுதியின் அடிப்படையில் பரிசீலிக்கப்படுகின்றன. இதன்மூலம், அவர்கள் சரியான நேரத்தில் தங்கள் கல்வி நிலையங்களில் சேர முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்" என தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x