Published : 26 Sep 2025 09:21 AM
Last Updated : 26 Sep 2025 09:21 AM
லே: வன்முறையால் பாதிக்கப்பட்ட லடாக்கில் பாதுகாப்பு நிலவரம் குறித்து துணநிலை ஆளுநர் உயர் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இதனிடையே, பருவநிலை செயல்பாட்டாளரின் பாகிஸ்தான் தொடர்பு குறித்து சிபிஐ விசாரித்து வருகிறது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து கடந்த 2019-ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, ஜம்மு-காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதி மக்கள் தங்கள் பகுதிக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என கோரி வருகின்றனர்.
இந்நிலையில், லடாக் பகுதிக்கு மாநில அந்தஸ்து வழங்குவதுடன் அரசியலமைப்பு சட்டத்தின் 6-வது அட்டவணையில் லடாக்கை சேர்க்க வலியுறுத்தி பருவநிலை செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக் கடந்த 2 வாரங்களாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்தார்.
இந்நிலையில், அவரது போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கும் வகையில், ‘லே அபெக்ஸ் பாடி' என்ற அமைப்பு நேற்று முன்தினம் முழு அடைப்பு போராட்டம் நடத்தியது. இதன் ஒரு பகுதியாக லே நகரில் திரண்ட போராட்டக்காரர்கள் அங்குள்ள லடாக் மலைப் பகுதி மேம்பாட்டு தன்னாட்சி கவுன்சில் அலுவலகம் மற்றும் பாஜக அலுவலகம் மீது தாக்குதல் நடத்தினர்.
மேலும் போலீஸார் மீது கற்களை வீசிய அவர்கள், சிஆர்பிஎப் வேன் உட்பட பல வாகனங்களுக்கு தீவைத்து எரித்தனர். இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தியும் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும் வன்முறையாளர்களை விரட்டினர். இந்த கலவரத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
80-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதையடுத்து, அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன்படி, 5 மற்றும் அதற்கு மேற்பட்டோர் ஒன்று கூடவும் அனுமதியின்றி போராட்டம் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே போராட்டத்தில் கலவரம் வெடித்ததால், சோனம் வாங்சுக் தனது உண்ணாவிரத போராட்டத்தை நேற்று முன்தினம் வாபஸ் பெற்றார்.
இந்த சூழ்நிலையில், துணை நிலை ஆளுநர் கவிந்தர் குப்தா தலைமையில் உயர்நிலை ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் காவல் துறை, சிஆர்பிஎப் மற்றும் நிர்வாக துறை உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில், சட்டம் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு நிலவரம் குறித்து விரிவாக ஆலோசனை நடைபெற்றது. மேலும் அமைதியை நிலைநாட்ட நிலைமையை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
வெளிநாட்டு நிதியுதவி: இதனிடையே, போராட்டத்துக்கு காரணமான சோனம் வாங்சுக் நிறுவிய ஹிமாலயன் இன்ஸ்டிடியூட் ஆப் ஆல்டர்நேட்டிவ்ஸ் லடாக் நிறுவனத்துக்கு சட்டவிரோதமாக வெளிநாட்டிலிருந்து நிதியுதவி வந்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் வாங்சுக் கடந்த பிப்ரவரி 6-ம் தேதி பாகிஸ்தானுக்கு சென்று வந்துள்ளார்.
இதுகுறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரணையை தொடங்கி உள்ளனர். மேலும், சோனம் வாங்சுக் தலைமையிலான லடாக் கல்வி மற்றும் கலாச்சார இயக்கத்துக்கு ‘வெளிநாட்டு நன்கொடை (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் (எப்சிஆர்ஏ) அளிக்கப்பட்ட லைசென்ஸை மத்திய அரசு நேற்று ரத்து செய்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT