Last Updated : 25 Sep, 2025 06:53 PM

1  

Published : 25 Sep 2025 06:53 PM
Last Updated : 25 Sep 2025 06:53 PM

‘The Ba***ds of Bollywood’ சீரிஸுக்கு எதிர்ப்பு: டெல்லி உயர் நீதிமன்றத்தில் சமீர் வான்கடே அவதூறு வழக்கு

டெல்லி: நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ‘The Ba***ds of Bollywood’ என்ற சீரிஸ் வெளியாகியுள்ளது. இந்த சீரிஸில் தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக, சீரிஸை தயாரித்த ரெட் சில்லீஸ் என்டெர்டெயின்மென்ட் நிறுவனத்தின் உரிமையாளர்களான ஷாருக்கான், கவுரி கான் மற்றும் அந்த சீரிஸை வெளியிட்ட நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்துக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு முன்னாள் அதிகாரி சமீர் வான்கடே.

ஆர்யன் கான் சிக்கிய கதை: கடந்த 2021 அக்டோபர் 2-ம் தேதி, மும்பையில் இருந்து கோவாவுக்கு கார்டிலியா நிறுவனத்தின் சொகுசுக் கப்பல் ஒன்று சுற்றுலா புறப்பட்டது. இதில் என்சிபி அதிகாரிகளும் சாதாரண உடையில் பயணம் செய்தனர். கப்பலில் நடந்த கேளிக்கை விருந்தின்போது, போதைப் பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணையின் அடிப்படையில் மொத்தம் 21 பேர் கைதாகினர். இதனிடையே, ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் இருந்து அவரைக் காப்பாற்ற ரூ.25 கோடி லஞ்சம் வாங்கியதாக சமீர் வான்கடே மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது.

பரபரப்பான இந்த வழக்கில் ஒரு தன்னிச்சையான சாட்சி, (independent witness) என்சிபி அதிகாரிகள் மற்றும் பிறர் ரூ.25 கோடி வஞ்சகமாக கேட்டனர் என்று கூறியது திருப்பத்தை ஏற்படுத்தியது. அதற்கு பின்னர் என்சிபி வான்கடே மற்றும் பிறருக்கு எதிராக துறை ரீதியாக நடத்திய விசாரணையின் தகவல்களை சிபிஐ-உடன் பகிர்ந்து கொண்டது. இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் சமீர் வான்கடே சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

ரூ,2 கோடி வேண்டும்! - இந்நிலையில், நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ‘The Ba***ds of Bollywood’ என்ற சீரிஸ் வெளியாகியுள்ளது. இந்த சீரிஸில் தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக, சீரிஸை தயாரித்த ரெட் சில்லீஸ் என்டெர்டெயின்மென்ட் நிறுவனத்தின் உரிமையாளர்களான ஷாருக்கான், கவுரி கான் மற்றும் அந்த சீரிஸை வெளியிட்ட நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்துக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் சமீர் வான்கடே அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். தனது நற்பெயருக்கு ஏற்படுத்திய களங்கத்துக்காக அவர்கள் ரூ.2 கோடி தர வேண்டும் என்றும், அதனை நேரடியாக டாடா புற்றுநோய் சிகிச்சை மையத்துக்கு அனுப்ப வேண்டும் என்றும் சமீர் கோரியுள்ளார்.

சமீர் வான்கடே | கோப்புப் படம்.

”நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகியுள்ள ‘The Ba***ds of Bollywood’ சீரிஸில் இடம்பெற்றுள்ள காட்சிகள் போதைத் தடுப்பு அமலாக்கப் பிரிவினைப் பற்றி தவறுதலாக, எதிர்மறையான எண்ணத்தை உருவாக்கும். இது இந்த அமைப்புகளின் மீது மக்களின் நம்பிக்கையை சிதைக்கும்.” என்று சமீர் வான்கடேவின் வழக்கறிஞர்களில் ஒருவரான ஆதித்ய கிரி தெரிவித்துள்ளார்.

அதுவும் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானின் மீதான வழக்கு மும்பை உயர் நீதிமன்றம் மற்றும் மும்பையின் என்டிபிஎஸ் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது தனது பெயருக்கு களங்கம் விளைவிப்பதுபோல் கருத்தை உருவாக்கி இருப்பது உள்நோக்கம் கொண்டது என்று வான்கடே மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

அது மட்டுமல்லாது சீரிஸில் ஒரு கதாபாத்திரம், ‘சத்யமேவ ஜெயதே’ என்ற தேசிய முழக்கத்தைச் சொல்லிவிட்டு தனது நடுவிரலை உயர்த்திக் காட்டும் மிக கீழ்த்தரமான செய்கையை செய்வதும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இது தேசத்துக்கே அவமரியாதை என்றும் வான்கடே தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x