Last Updated : 25 Sep, 2025 05:55 PM

7  

Published : 25 Sep 2025 05:55 PM
Last Updated : 25 Sep 2025 05:55 PM

லடாக் போராட்டம் | “என்னை சிறை வைத்தால் பிரச்சினை அதிகரிக்கும்” - சோனம் வாங்சுக் எச்சரிக்கை

சோனம் வாங்சுக் | கோப்புப் படம்

லே: “லடாக் போராட்டத்துக்காக என்னை சிறை வைத்தால், அது பிரச்சினையை அதிகமாக்கவே செய்யும்” என்று சூழலியல் செயற்பாட்டாளரும், லடாக் மாநில அந்தஸ்துக்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருபவருமான சோனம் வாங்சுக் தெரிவித்துள்ளார்.

லடாக் பகு​திக்கு மாநில அந்​தஸ்​து வழங்கக் கோரியும், அரசி​யலமைப்பு சட்​டத்​தின் 6-வது அட்​ட​வணை​யில் லடாக்கை சேர்க்க வலி​யுறுத்​தி​யும் பரு​வநிலை செயற்​பாட்​டாளர் சோனம் வாங்​சுக் கடந்த 2 வாரங்​களாக உண்​ணா​விரதம் மேற்​கொண்டு வந்​தார். இந்​நிலை​யில் அவரது போராட்​டத்​துக்கு ஆதரவு அளிக்​கும் வகையில் லடாக்​கில் நேற்று முழு அடைப்பு போராட்​டத்​துக்கு ‘லே அபெக்ஸ் பாடி' என்ற அமைப்​பின் இளைஞர் அணி அழைப்பு விடுத்​தது. ஆனால், அது வன்முறையில் முடிந்தது.

அதென்ன அரசி​யலமைப்பு சட்​டத்​தின் 6-வது அட்​ட​வணை? - இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஆறாவது அட்டவணை, அசாம், மேகாலயா, திரிபுரா மற்றும் மிசோரம் ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் வாழும் பழங்குடியினரின் மொழி, கலாச்சாரம், நாகரீகம், பொருளாதாரம் மற்றும் வாழ்வாதார உரிமைகளைப் பாதுகாப்பதற்காக, அந்தப் பகுதிகளில் தன்னாட்சி அதிகாரம் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மாநில அந்தஸ்தத்தோடு, தன்னாட்சி அதிகாரத்தையும் லடாக் போராட்டக்காரர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

‘பலிகிடா அரசியல் பலனளிக்காது’ - இந்நிலையில், இளைஞர்கள் வன்முறையில் ஈடுபட சோனம் வாங்சுக்கின் பேச்சுதான் காரணம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டது. அதற்கு எதிர்வினையாற்றியுள்ள சோனம் வாங்சுக், “மத்திய உள்துறை அமைச்சகம், லடாக் வன்முறையில் என்னை பலிகிடா ஆக்கப் பார்க்கிறது. பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் என்னை கைது செய்ய ஆயத்தமாகிறார்கள். இரண்டு ஆண்டுகள் என்னை சிறையிலடைக்க அவர்கள் திட்டமிடுகிறார்கள்.

நானும் கைதாவதற்கு தயார் தான். ஆனால், என்னை சுதந்திரமாக விடுவதைவிட; என்னைக் கைது செய்வது அரசுக்கு கூடுதல் பிரச்சினைகளையே ஏற்படுத்தும். பிரச்சினைக்கு என்னை பலிகடா ஆக்கும் அரசியலை பாஜக கைவிடலாம். கலவரங்களுக்கும், பிரச்சினைகளுக்கும் என்னையோ அல்லது காங்கிரஸ் கட்சியையோ குறை சொல்வதை விடுத்து அதன் வேர் அறிந்து சரி செய்ய முற்படலாம். அவர்கள் (மத்திய அரசு) பழிபோடும் அரசியலின் தந்திரம் தெரிந்தவர்களாக இருக்கலாம். ஆனால், எல்லா வேளையிலும் அது பலனளிக்காது. இப்போது அவர்களின் தந்திரத்தைவிட புத்திசாலித்தனம் தான் பலனளிக்கும். இளைஞர்கள் ஏற்கெனவே விரக்தியில் உள்ளனர்” என்று கூறியுள்ளார்.

வேலைவாய்ப்பின்மையே வேர் - முன்னதாக நேற்றைய கலவரம் குறித்து கருத்து தெரிவித்த வாங்சுக், “6 ஆண்டு காலமாக வேலைவாய்ப்பின்மையால் லடாக் இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு படிநிலையிலும் நிறைவேறாத வாக்குறுதிகள் அவர்களை விரக்திக்கு தள்ளியுள்ளது. லடாக்கில் பழங்குடியின கலாச்சார அந்தஸ்தையும், சூழலியல் பாதுகாப்பு பற்றியும் 5 ஆண்டுகளாக அமைதி வழியில் வைத்த கோரிக்கைகள் ஏதும் செவிசாய்க்கப்படவில்லை. அதுவே அவர்கள் வன்முறையில் இறங்கக் காரணம்.” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், இன்று அளித்த ஊடகப் பேட்டியில், “அரசின் பலிகிடா அரசியல் அமைதிக்கு வழிவகுக்காது. மாறாக, மக்களின் கோரிக்கைகளை திசை திருப்புவதால் அவர்களை இன்னும் ஆத்திரமடையச் செய்யும்.” என்று கூறியுள்ளார். | விரிவான தகவல்களுக்கு > லடாக் போராட்ட களத்தில் ஜென் ஸீ இளைஞர்களும் பின்னணியும் - யார் இந்த சோனம் வாங்சுக்?

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x