Published : 25 Sep 2025 02:06 AM
Last Updated : 25 Sep 2025 02:06 AM

வயதின் அடிப்படையில் அரசியல் வாழ்க்கையை மதிப்பிடலாமா? - வாக்காளர்களுக்கு வயது குறித்த புரிதல் இல்லை

பிரதமர் நரேந்திர மோடி தனது 75-வது பிறந்தநாளைக் கொண்டாடிய போது, பாஜக மற்றும் சங் பரிவாருக்குள் “வயது வரம்பு” விதி இருப்பதாக கூறப்படுவது தொடர்பான ஊகங்கள் அதிகரித்தன. எல்.கே அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி போன்ற மூத்த தலைவர்கள் ஓய்வு பெற்றதை ஊடகமும், அரசியல் முணுமுணுப்புகளும் சுட்டிக்காட்டின. மோடி ஏன் வித்தியாசமாக நடத்தப்பட வேண்டும் என்று விமர்சகர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

இவை அனைத்தும் நல்ல கேள்விகள். பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வுகளில் தகுந்த பதில்கள் தெளிவாக வழங்கப்பட்டன. உண்மைகளுக்கு மாற்றாக அவற்றுக்கு அரசியல் சாயம் பூசப்பட்டது. தற்போது பிறந்தநாள் முடிவடைந்துள்ள வேளையில், ஒரு விரிவான பகுப்பாய்வு அவசியமாகிறது.

இந்தியாவில், கூறப்படும் வயது வரம்புக்கு மேல் பல பிரதமர்கள் திறம்பட பணியாற்றி இருக்கிறார்கள். 1991 நிதி சீர்திருத்தங்களின் வாயிலாக நாட்டை வழிநடத்திச் சென்ற போது பி.வி.நரசிம்ம ராவுக்கு வயது 70-ஐ கடந்திருந்தது. மோடிக்கு முன்பு பிரதமராக இருந்த மன்மோகன் சிங், தனது 81-வது வயது வரை ஆட்சியில் இருந்தார். இன்றும் கூட காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத் பவார் போன்றவர்கள் தங்களது எண்பது வயதுகளிலும் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.

பாஜகவின் வரலாறும் இதையே பிரதிபலிக்கிறது. கடந்த 2004-ல் அடல் பிகாரி வாஜ்பாய் தமது 79-வது வயதில் மறு தேர்தலுக்குப் பிரச்சாரம் செய்து 84 வயது வரை நாடாளுமன்றத்தில் பணியாற்றினார். அத்வானி தனது எண்பதுகள் வரை கட்சியை வழிநடத்திச் சென்றார், இறுதியில் தனது நாடாளுமன்ற செயல்பாட்டை 91 வயதில் முடித்துக் கொண்டார். முரளி மனோகர் ஜோஷி, 85 வயதில் தனது பதவிக் காலம் முடியும் வரை, கல்வி மற்றும் எரிசக்தி குறித்த விவாதங்களை வடிவமைத்து, செல்வாக்கு மிக்க நாடாளுமன்றக் குழுக்களுக்குத் தலைமை தாங்கினார்.

2024 தேர்தல் பிரச்சாரத்தின் மூன்று மாத காலத்தில், 200-க்கும் மேற்பட்ட பொதுக் கூட்டங்களில் ​​மோடி உரையாற்றினார். பெரும்பாலான நாட்கள், கோடை வெயிலின் உச்சத்தில் மூன்று அல்லது நான்கு இடங்களில் உரையாற்றிய பின், அரசு சார்ந்த பணிகளுக்காக அவர் டெல்லிக்குத் திரும்புவார். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், அவர் அந்தப் பணியை மேற்கொள்ள தயாராக இருந்தார், இன்னமும் இருக்கிறார்.

அரசியலில் நீண்ட ஆயுள் என்பது வெறும் உடல் உறுதி சார்ந்தது அல்ல. தனது தலைமுறையின் மிகவும் திறமையான மற்றும் அறிவார்ந்த அரசியல் வாதியாக மோடி விளங்குகிறார். அவரது புகழுக்கு முக்கிய காரணம் அவரது போற்றத்தக்க மற்றும் தொடர்ச்
சியான பரிணாம வளர்ச்சியாகும். ஆனால், வாக்காளர்களுக்கு வயது குறித்த புரிதல் இல்லை.

நிதிநுட்பம் முதல் குறைக்கடத்திகள் வரை, வளர்ந்து வரும் தொழில்நுட்பம் முதல் வர்த்தக ஒப்பந்தங்களில் லட்சியம் வரை, அவர் வயதில் இளையவர் அல்ல, ஆனால் நிச்சயமாக சிந்தனையில் இளைஞர். அதனால்தான் இந்தியர்கள் அவர் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். வயதின் அடிப்படையில் மட்டுமே அரசியல் வாழ்க்கையை மதிப்பிடுவதும், மோடியின் நீடித்த ஈர்ப்பை அளவிடுவதும், நியாயமற்றது, யதார்த்தமில்லாதது.

- அசோக் மாலிக், ஆசிய குழுமத்தின் இந்திய பங்குதாரர்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x