Published : 25 Sep 2025 01:36 AM
Last Updated : 25 Sep 2025 01:36 AM
சம்பா: நடித்துக் கொண்டிருக்கும்போதே மாரடைப்பு ஏற்பட்டதில் மேடையிலேயே நாடக நடிகர் உயிரிழந்த சம்பவம் இமாச்சல பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.
இமாச்சல பிரதேச மாநிலம் சம்பா பகுதியைச் சேர்ந்தவர் அம்ரேஷ் மகாஜன் (70). நாடக நடிகரான இவர், பல்வேறு நாடகங்களில் பல வேடங்களில் நடித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றவர்.
பெரும்பாலும் இவர் ராமாயணம், மகாபாரதம், ராம்லீலா போன்ற நாடங்களில் நடிப்பார். நேற்று முன்தினம் இவர் சம்பா பகுதியில் நடைபெற்ற ராம்லீலா நாடகத்தில் தசரத மகாராஜா வேடமிட்டு நடித்துக் கொண்டிருந்தார். ராஜ சபையில் சிம்மாசனத்தில் அமர்ந்து அம்ரேஷ் மகாஜன், தசரதனாக நடித்துக் கொண்டிருந்தார். அப்போது இவர் திடீரென சிம்மாசனத்திலேயே மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனால் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே அம்ரேஷ் மகாஜன் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவருக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டதால் உயிரிழந்துள்ளார் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
வயதான காலத்திலும் அம்ரேஷ் மகாஜன் தசரதன், ராவணன் உள்ளிட்ட வேடங்களை ஏற்று நடித்து வந்தார். தான் பங்கேற்கும் இந்த ராம்லீலா நாடகம்தான் தனது கடைசி நாடகம் என்று அனைவரிடமும் அம்ரேஷ் மகாஜன் கூறி வந்தாராம். அதன்படியே அவர் நடித்துக் கொண்டிருக்கும் போதே மேடையிலேயே உயிரிழந்துவிட்டார். அவர் மேடையிலேயே உயிரிழந்ததைப் பார்த்து சக நடிகர், நடிகைகள் கண்கலங்கி அழுதது பார்ப்பவர் நெஞ்சை உருக்குவதாக அமைந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT