Published : 25 Sep 2025 01:27 AM
Last Updated : 25 Sep 2025 01:27 AM
சென்னை: ஐ.நா. சபையின் டிஜிட்டல் மற்றும் வளரும் தொழில்நுட்பங்களுக்கான அலுவலகத்தின் சிறப்பு மையமாக சென்னை ஐஐடியை மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது என்று மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பத்துறை செயலர் எஸ்.கிருஷ்ணன் தெரிவித்தார்.
தற்போதைய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) காலச்சூழலில் சவால்களை திறம்பட கையாள்வதற்காக டிஜிட்டல் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கான அலுவலகத்தை (ODET) ஐக்கிய நாடுகள் சபை அமைத்துள்ளது. அதன்படி, ஒவ்வொரு நாடும் ஐ.நா. சபையின் இந்த அலுவலகத்தால் ஆதரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களை அடையாளம் காட்ட வேண்டும்.
இந்நிலையில், ஐ.நா. சபையின் 80-வது பொதுச்சபை கூட்டம் நியூயார்க்கில் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் மத்திய மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் செயலர் எஸ்.கிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் பேசியதாவது: செயற்கை நுண்ணறிவு, திறன் மேம்பாடு மற்றும் வளரும் தொழில்நுட்பம் ஆகியவற்றில் தனது ஆதரவை சென்னை ஐஐடி சிறந்த முறையில் அளித்து வருகிறது. இந்த கல்வி நிறுவனத்தை டிஜிட்டல் மற்றும் வளரும் தொழில்நுட்பங்களுக்கான ஐ.நா. அலுவலகத்தின் சிறப்பு மையமாக இந்தியா பரிந்துரை செய்கிறது.
மேலும், 2026-ம் ஆண்டு பிப்ரவரியில் ஏஐ சார்ந்த உச்சி மாநாட்டை இந்தியா நடத்த உள்ளது. இதில் ஐ.நா. உறுப்பு நாடுகள் மற்றும் கல்வி நிறுவனங்களும் பங்கேற்க வேண்டும். இவ்வாறு எஸ்.கிருஷ்ணன் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT