Published : 24 Sep 2025 03:38 PM
Last Updated : 24 Sep 2025 03:38 PM
லே: லடாக் யூனியன் பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்து அளிக்க வலியுறுத்தி தலைநகர் லே-யில் உள்ள பாஜக அலுவலகத்தின் முன் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது.
மாநில அந்தஸ்து, ஆறாவது அட்டவணை அந்தஸ்து உள்ளிட்ட கோரிக்கைகளை லடாக்கில் உள்ள லே உச்ச அமைப்பு (Leh Apex Body-LAB) தொடர்ந்து முன்வைத்து வருகிறது. மேலும், தங்கள் கோரிக்கை தொடர்பாக மத்திய அரசு ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும் என்றும் எல்ஏபி வலியுறுத்தி வருகிறது.
இதனிடையே, கோரிக்கையை வலியுறுத்தி சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் உள்ளிட்ட இருவர், கடந்த 10-ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடல்நிலை மோசமானதை அடுத்து அவர்கள் இருவரும் நேற்று (செப். 23) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது அவர்களின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று கடையடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்த எல்ஏபி ஆதாரவாளர்கள், லே நகரில் உள்ள பாஜக அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போராட்டக்காரர்களைக் கலைக்க போலீஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியுள்ளனர்.
இதனால், பாஜக ஆதரவாளர்களுக்கும் எல்ஏபி ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், பல வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. இதனிடையே, நாளை முழு அடைப்பு போராட்டத்துக்கு கார்கிலின் சமூக - அரசியல் - மத குழுக்களின் கூட்டமைப்பான கார்கில் ஜனநாயகக் கூட்டணி (கேடிஏ) அழைப்பு விடுத்துள்ளது.
சோனம் வாங்சுக்கின் உண்ணாவிரதப் போராட்டத்தை அடுத்து, கோரிக்கைகள் தொடர்பாக எல்ஏபி மற்றும் கேடிஏ உடன் லடாக் தொடர்பான உயர் அதிகாரக் குழு அக்டோபர் 6ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் சமீபத்தில் அறிவித்தது. இந்த அறிவிப்பை ஏற்க மறுத்த சோனம் வாங்சுக், நீண்டகாலமாக நிலுவையில் உள்ள லடாக்கின் கோரிக்கைகள் தொடர்பாக ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தையை மத்திய அரசு உடனடியாக தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.
லடாக் தன்னாட்சி மலை மேம்பாட்டு கவுன்சில் தேர்தல்கள் அடுத்த மாதம் நடைபெற உள்ளன. இந்நிலையில், இந்த போராட்டம் லடாக்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2020ல் நடந்த லடாக் தன்னாட்சி மலை மேம்பாட்டு கவுன்சில் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. ஜம்மு காஷ்மீரில் இருந்து 2019-ல் பிரிக்கப்பட்ட லடாக் அதுமுதல் யூனியன் பிரதேசமாக இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT