Published : 24 Sep 2025 02:20 PM
Last Updated : 24 Sep 2025 02:20 PM
டெல்லி: டெல்லியின் வசந்த் கஞ்ச் பகுதியில் உள்ள கல்வி நிறுவனத்தின் இயக்குநரான சைதன்யானந்த சரஸ்வதி என்கிற பார்த்தசாரதி, பல மாணவிகளை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. அவர் தற்போது தலைமறைவாக உள்ளார்.
சைதன்யானந்த சரஸ்வதி என்று அழைக்கப்படும் பார்த்தசாரதி, டெல்லி வசந்த் கஞ்சில் உள்ள உயர் கல்வி நிறுவனத்தின் இயக்குநராக இருந்தார். இவர் மீது பதினேழு மாணவிகள் பாலியல் துன்புறுத்தல், ஆபாசமான பேச்சு, ஆபாசமான வாட்ஸ்அப்/எஸ்எம்எஸ் உரையாடல் ஆகிய புகார்களை தெரிவித்தனர்.
ஆகஸ்ட் 4 ஆம் தேதி வசந்த் கஞ்ச் வடக்கு காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டது. சைதன்யானந்த சரஸ்வதி மீது பாலியல் துன்புறுத்தல் மற்றும் போலி ஆவணங்களைத் தயாரித்ததாக டெல்லி காவல்துறையால் வழக்குகள் தொடரப்பட்டதைத் தொடர்ந்து அவர் தலைமறைவாகிவிட்டார்.
விசாரணையின் போது, ஸ்ரீ சாரதா இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியன் மேனேஜ்மென்ட் கல்வி நிறுவனத்தில் பொருளாதார ரீதியாக பின் தங்கிய பிரிவு (EWS) உதவித்தொகையின் கீழ் படிக்கும் 32 பெண் மாணவிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன. அதில் 17 பேர், சைதன்யானந்த சரஸ்வதி தங்களிடம் ஆபாசமாக பேசியதாகவும், ஆபாசமான செய்திகளை அனுப்பியதாகவும், பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் குற்றம் சாட்டினர். சில ஆசிரியர்களும், நிர்வாகிகளும் மாணவிகளை அவரது ஆசைக்கு இணங்க அழுத்தம் கொடுத்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
இதுகுறித்து சைதன்யானந்த சரஸ்வதி மீது பிஎன்எஸ் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது, பின்னர் பாதிக்கப்பட்ட மாணவிகள் நீதிபதி முன்பு சாட்சியம் அளித்தனர்.
நிறுவனத்தின் அடித்தளத்தில் இருந்து சாமியார் சரஸ்வதி பயன்படுத்திய போலியான எண் தகடு 39 UN 1 கொண்ட ஒரு வால்வோ காரையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். சைதன்யானந்த சரஸ்வதி தலைமறைவாக உள்ள நிலையில், அவரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT