Published : 24 Sep 2025 08:25 AM
Last Updated : 24 Sep 2025 08:25 AM
புதுடெல்லி: வட மாநிலங்களில் நவராத்திரி நாட்களில் கர்பா, தாண்டியா எனும் கோலாட்டங்கள் நடைபெறுவது வழக்கம். உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் விஸ்வ இந்து பரிஷத் (விஎச்பி) தேசிய செய்தித் தொடர்பாளர் ராஜ் நாயர் வெளியிட்ட அறிவிப்பில், “கர்பா என்பது வெறும் நடனம் அல்ல, தெய்வ வழிபாட்டின் ஒரு வடிவம். சிலை வழிபாட்டில் நம்பிக்கை இல்லாதவர்கள் இவற்றில் பங்கேற்க உரிமை இல்லை. இதுபோன்ற நிகழ்வுகளில் இந்துக்கள் அல்லாதோர் இருப்பது எங்கள் மத உணர்வுகளை புண்படுத்துகிறது” என்று கூறியுள்ளார்.
விஎச்பியின் உ.பி. மாநில செய்தித் தொடர்பாளர் வினோத் பன்சால் வெளியிட்ட அறிக்கையில், "இந்து சமூகம் விழிப்புடன் உள்ளது. கர்பா, தாண்டியா நடன கூட்டங்களில் ஊடுருவுபவர்கள் லவ் ஜிஹாத், மதமாற்றம் போன்ற சதித் திட்டங்களுக்கு முயற்சிக்கின்றனர். இது தொடர்பாக இந்துக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உள்ளே நுழைபவர்களின் ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டைகளை சரிபார்ப்பதுடன், நெற்றியில் திலகம் பூச வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
ராஜஸ்தானில் ஆணுக்கும், பெண்ணுக்கும் தனித்தனியாக கர்பா பந்தல் அமைக்க அம் மாநில பாஜக தலைவர் மதன் ரத்தோர் ஆலோசனை வழங்கியுள்ளார். இதற்கு மாநில கல்வி அமைச்சர் மதன் தில்வார் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுபோன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி உ.பி.யின் கான்பூரில், விஎச்பி, பஜ்ரங் தளம் சார்பில் மாநகர காவல் ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
இதுகுறித்து சிவசேனா (உத்தவ்) எம்.பி. சஞ்சய் ராவத் கூறுகையில், “நாட்டில் வகுப்புவாத சூழலை உருவாக்க முயற்சிகள் நடைபெறுகின்றன. இது அனைத்து மதத்தினரின் வாழ்வாதாரம். இந்த வகையான விஷம் மகாராஷ்டிராவுக்கோ அல்லது நாட்டுக்கோ நல்லதல்ல” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT