Published : 24 Sep 2025 08:00 AM
Last Updated : 24 Sep 2025 08:00 AM
கொல்கத்தா: மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் திங்கள்கிழமை இரவு முழுவதும் கனமழை கொட்டி தீர்த்தது. இதில் மின்சாரம் தாக்கி மூவர் உட்பட மொத்தம் 8 பேர் உயிரிழந்தனர். கொல்கத்தாவில் நேற்றுமுன்தினம் இரவு முழுவதும் கனமழை பெய்தது. இதன் காரணமாக, நகரின் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
பெனியாபுகுர், காலிகபூர், நேதாஜி நகர், காரியஹட், ஏக்பல்பூர், பெஹலா மற்றும் ஹரிதேவ்பூர் நகரில் நிகழ்ந்த பல்வேறு சம்பவங்களில் மொத்தம் 8 பேர் உயிரிழந்தனர். இதில் மின்சார கசிவின் காரணமாக உயிரிழந்த 3 பேரும் அடக்கம். சாலைகள், ரயில் பாதைகளில் தண்ணீர் தேங்கியதால் பேருந்து போக்குவரத்து, புறநகர் ரயில் சேவை, மெட்ரோ சேவைகள் முடங்கின. தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்ததால் மக்களின் உடமைகளுக்கு பெருத்த சேதம் ஏற்பட்டது. கனமழை தொடரும் என்ற அறிவிப்பின் காரணமாக பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.
கொல்கத்தா முனிசிபல் கார்ப்பரேஷன் புள்ளிவிவரப்படி, கொல்கத்தா நகரின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகள் கனமழையால் அதிகம் பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக, கரியா காம்தாஹரியில் சில மணி நேரங்களில் மட்டும் 332 மில்லி மீட்டர் அளவுக்கு மழை கொட்டி தீர்த்தது. இதைத் தொடர்ந்து ஜோத்பூர் பார்க்கில் 285 மி.மீ, காலிகட் 280 மி.மீ, டாப்சியா 275 மி.மீ, பாலிகஞ்ச் 264 மி.மீ. உள்ளிட்ட நகரங்களிலும் அதிக அளவில் மழைப்பொழிவு இருந்தது.
வங்காள விரிகுடா பகுதியில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாகவே கொல்கத்தாவில் விடிய விடிய மழை கொட்டித் தீர்த்ததாக வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துர்கா பூஜை கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ள நிலையில் கொல்கத்தா நகரில் பெய்து வரும் இந்த கனமழை பக்தர்களுக்கு கடும் இடையூறை ஏற்படுத்தியுள்ளது.
சாலைகள் முழுவதும் தண்ணீர் தேங்கியுள்ளதால் ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ விமான நிறுவனங்களின் புறப்பாடு தாமதமாகலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, விமான நிலையத்துக்கு புறப்படுவதற்கு முன்பாக பயணிகள் தங்களது புறப்பாடு நேரத்தை மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு விமான நிறுவனங்கள் கேட்டுக்கொண்டுள்ளன.
கொல்கத்தா மேயரும், திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவருமான பிர்ஹாத் ஹக்கீம் கூறுகையில்" கொல்கத்தா நகரில் இவ்வளவு தண்ணீர் தேங்கியதை நான் இதுவரை பார்த்ததில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாநகராட்சி, உணவு மற்றும் தங்குமிடத்தை ஏற்பாடு செய்து வருகிறது. மழை தொடரவில்லை என்றால் கொல்கத்தா நகரின் நிலைமை விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT