Published : 24 Sep 2025 07:51 AM
Last Updated : 24 Sep 2025 07:51 AM
புதுடெல்லி: சுதேசி பொருட்களை பயன்படுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்திய நிலையில், மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் 'ஜோஹோ' மென்பொருள் சேவை தளத்துக்கு மாறி உள்ளார். இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50% வரி விதித்துள்ளதால் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சமீப காலமாக உள்நாட்டில் தயாராகும் பொருட்கள் மற்றும் சேவைகளை (சுதேசி) பயன்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தி வருகிறார்.
இந்த சூழலில் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “நான் ஆவணங்கள், அட்டவணைகள் மற்றும் விளக்கப்படங்களுக்காக நமது உள்நாட்டு மென்பொருள் சேவை தளமான ஜோஹோவை பயன்படுத்தத் தொடங்கி விட்டேன். பிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்று அனைவரும் சுதேசி பொருட்கள் மற்றும் சேவைகளைப் பயன்படுத்த வேண்டும்” என கூறியுள்ளார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் ஜோஹோ நிறுவன தலைமைச் செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு வெளியிட்ட எக்ஸ் பதிவில், “நன்றி சார், எங்கள் தயாரிப்பு தொகுப்பை உருவாக்க 20 ஆண்டுகளுக்கும் மேலாக கடினமாக உழைத்த எங்கள் பொறியாளர்களுக்கு இது மிகப்பெரிய மன உறுதியை அளிக்கிறது. நாங்கள் உங்களை பெருமைப்படுத்துவோம், நமது நாட்டையும் பெருமைப்படுத்துவோம். ஜெய் ஹிந்த்" என கூறியுள்ளார். ஜோஹோ, ஸ்ரீதர் வேம்பு தலைமையில் கடந்த 1996-ல் இந்தியாவில் தொடங்கப்பட்ட பன்னாட்டு நிறுவனம் ஆகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT