Published : 23 Sep 2025 07:12 PM
Last Updated : 23 Sep 2025 07:12 PM
புதுடெல்லி: நாட்டின் உயரிய திரைப்பட விருதான ‘தாதா சாகேப் பால்கே’ விருது, மலையாள நடிகர் மோகன்லாலுக்கு வழங்கப்பட்டது. டெல்லியில் விஞ்ஞான் பவனில் நடைபெற்ற 71-வது தேசிய திரைப்பட விருது விழாவில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, அவருக்கு இந்த விருதினை வழங்கி சிறப்பித்தார்.
இந்தியத் திரைத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தாதா சாகேப் பால்கே விருதை, மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்நிலையில், கடந்த 2023-ம் ஆண்டுக்கான விருது நடிகர் மோகன்லாலுக்கு கடந்த 20ம் தேதி அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், "நடிகர் மோகன்லாலின் தனித்துவமான திறமை, நிபுணத்துவம், கடின உழைப்பு ஆகியவை இந்திய திரைத்துறை வரலாற்றில் அவருக்கு சிறந்த இடத்தை பெற்றுத் தந்துள்ளது. நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என இந்திய திரைத்துறைக்கு அவர் ஆற்றிய சிறப்பான பங்களிப்புக்காக இந்த விருது வழங்கப்படுகிறது" என தெரிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று இந்த விருது வழங்கப்பட்டது. அப்போது, மோகன்லாலின் மனைவி சுசித்ரா மோகன்லால் உட்பட அரங்கில் இருந்த அனைவரும் எழுந்து நின்று கைகளைத் தட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பலத்த கைத்தட்டல்களுக்கு மத்தியில் மோகன்லால், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் இருந்து தாதா சாகேப் பால்கே விருதினைப் பெற்றார். விழாவில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கலந்து கொண்டார்.
முன்னதாக, 2023-ல் வெளிவந்த ஜவான் படத்தில் சிறப்பாக நடத்ததற்காக சிறந்த நடிகருக்கான விருது இந்தி நடிகர் ஷாருக்கானுக்கு வழங்கப்பட்டது. இதேபோல், '12th Fail' படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருது விக்ராந்த் மாஸ்ஸேவுக்கு வழங்கப்பட்டது.
மோடி வாழ்த்து: மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "மோகன்லால் உயர் சிறப்புக்கு உரியவர். பலவகை கதாபாத்திரங்களில் தனது நடிப்புத்திறனை வெளிப்படுத்தி சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்பவர். பல ஆண்டுகளாகத் தமது சிறப்பான படைப்புகளுடன், மலையாள சினிமா, நாடகத்துறை ஆகியவற்றில் அவர் முன்னணி நட்சத்திரமாகத் திகழ்கிறார்.
கேரள கலாச்சாரத்தின் மீது அவர் மிகுந்த ஆர்வம் கொண்டவர். தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி மொழிகளிலும் அவர் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளார். அனைத்து தளங்களிலும் அவரது திரைப்பட, நாடக நடிப்புத் திறமை உண்மையிலேயே ஊக்கமளிப்பதாக உள்ளது. தாதாசாகேப் பால்கே விருது பெறுவதற்காக அவருக்கு வாழ்த்துகள். அவரது சாதனைகள் வருங்கால சந்ததியினருக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கட்டும்." என தெரிவித்திருந்தார்.
இதற்கு முன்பு, நடிகர் சிவாஜி கணேசன், அடூர் கோபாலகிருஷ்ணன், கே.பாலச்சந்தர், ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், ராஜ் கபூர் உள்ளிட்டோர் தாதா சாகேப் பால்கே விருதை பெற்றுள்ளனர்.
மலையாள நடிகரான மோகன்லால், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உட்பட பல மொழிகளில் சுமார் 360 திரைப்படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். தற்போது ‘விருஷபா’ என்ற பான் இந்தியா படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் அடுத்த மாதம் வெளியாக இருக்கிறது. மோகன்லாலுக்கு ஏற்கெனவே பத்மஸ்ரீ, பத்மபூஷண் ஆகிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT