Last Updated : 22 Sep, 2025 07:15 PM

5  

Published : 22 Sep 2025 07:15 PM
Last Updated : 22 Sep 2025 07:15 PM

‘ஒவ்வொரு வீட்டுக்கும் புன்னகை உறுதி...’ - ஜிஎஸ்டி 2.0 அமலுக்கு வந்தது குறித்து பிரதமர் மோடி நெகிழ்ச்சி

புதுடெல்லி: ஜிஎஸ்டி வரி சீர்திருத்த அமலாக்கம் பண்டிகை கால கொண்டாட்டத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், ஒவ்வொரு வீட்டிலும் பிரகாசமான புன்னகையை உறுதி செய்வதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் இன்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. புதிய வரிக் கட்டமைப்பின் கீழ், 5% மற்றும் 18% ஆகிய வரி விகிதங்கள் மட்டுமே இருக்கும் என்றும், இதன் மூலம், பெரும்பாலான அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்கள் மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. குறிப்பாக, உணவுப் பொருட்கள், மருந்துகள், சோப்பு, பற்பசைகள், ஆயுள் காப்பீடு ஆகியவை வரி இல்லாத அல்லது 5% வரி மட்டுமே கொண்ட ஜிஎஸ்டி பிரிவில் வந்துள்ளது. முன்னர் 12% வரி விதிக்கப்பட்ட பொருட்களில் 99 சதவீத பொருட்கள் இப்போது 5% வரி வரம்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் வரி குறைப்பை அடுத்து பல்வேறு நிறுவனங்களும் தங்கள் பொருட்களின் புதிய குறைக்கப்பட்ட விலைகளின் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. பொருட்களின் விலை குறைக்கப்பட்டிருப்பதற்கு பொதுமக்கள், வியாபாரிகள், சிறு, குறு, நடுத்தர தொழில்முனைவோர் என பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ஜிஎஸ்டி வரி சீர்திருத்த அமலாக்கம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, "சந்தைகள் முதல் வீடுகள் வரை ஜிஎஸ்டி சீர்திருத்தம் ஒரு பண்டிகைக் கால கொண்டாட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் பிரகாசமான புன்னகையை உறுதி செய்கிறது" என தெரிவித்துள்ளார். மேலும், ஜிஎஸ்டி வரி சீர்திருத்த அமலாக்கம் குறித்த தேசிய நாளிதழ்களின் செய்திகளையும் தனது எக்ஸ் பக்கத்தில் இணைத்துள்ளார்.

முன்னதாக, நாட்டு மக்களுக்கு நேற்று உரை நிகழ்த்திய பிரதமர் நரேந்திர மோடி, "நடுத்தர வகுப்பைச் சேர்ந்த மக்களின் வசதிக்காகவும் அவர்களது சுமையைக் குறைக்கும் நோக்கத்திலும், 12 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி விலக்கு என்ற உன்னத பரிசை இந்த ஆண்டு அரசு வழங்கியது.

இப்போது ஏழைகள் மற்றும் புதிய நடுத்தர வகுப்பினர் இரட்டை அன்பளிப்புகளைப் பெறுகின்றனர். முதலாவது, வருமான வரி விலக்கின் மூலமான பயன் மற்றும் இரண்டாவது, தற்போது குறைக்கப்பட்ட ஜிஎஸ்டியினால் ஏற்படக்கூடிய பயன். குறைந்த ஜிஎஸ்டி விகிதங்களால், குடிமக்களின் தனிப்பட்ட கனவுகளான வீடு கட்டுவது, தொலைக்காட்சிப் பெட்டி அல்லது குளிர்சாதனப் பெட்டி வாங்குவது, அல்லது ஸ்கூட்டர், பைக் அல்லது கார் வாங்குவது என அனைத்திற்கும் இனி குறைந்த செலவே ஆகும்" என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x