Last Updated : 22 Sep, 2025 07:45 PM

17  

Published : 22 Sep 2025 07:45 PM
Last Updated : 22 Sep 2025 07:45 PM

அவதூறு குற்றமற்றது என்று அறிவிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது: உச்ச நீதிமன்றம் கருத்து

புதுடெல்லி: அவதூறு குற்றமற்றது என்று அறிவிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

குற்றவியல் அவதூறு சட்டத்தின் பயன்பாடு அதிகரித்து வருவது குறித்து உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. தனிநபர்களும், அரசியல் கட்சிகளும் குற்றவியல் அவதூறு சட்டத்தை பயன்படுத்துவது அதிகரித்து வருவதைப் பற்றி உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் இன்று தனது கோபத்தை வெளிப்படுத்தினார். இன்று நடைபெற்ற விசாரணையின் போது, ​​நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், "இவை அனைத்தையும் குற்றமற்றதாக்குவதற்கான நேரம் வந்துவிட்டது என்று நான் நினைக்கிறேன்..." என்று குறிப்பிட்டார்.

2016-ஆம் ஆண்டு சுப்பிரமணியன் சுவாமி மற்றும் மத்திய அரசு இடையேயான வழக்கில், அரசியலமைப்பின் பிரிவு 19(1)(a)-இல் குறிப்பிடப்பட்டுள்ள பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்துரிமைக்கு குற்றவியல் அவதூறு சட்டம் ஒரு நியாயமான கட்டுப்பாடாக உள்ளது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. அப்போது வழங்கப்பட்ட தீர்ப்பில், நற்பெயருக்கான உரிமை அரசியலமைப்பின் பிரிவு 21-இன் கீழ் வாழ்க்கை மற்றும் கண்ணியத்துக்கான அடிப்படை உரிமையின் கீழ் வருகிறது என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

குற்றவியல் அவதூறு சட்டத்தின் பயன்பாடு குறித்த நீதிமன்றத்தின் கவலையை பிரதிபலிக்கும் வகையில், இன்று நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் வெளியிட்ட கருத்தில், "ஒரு தனிப்பட்ட நபர் எந்தவொரு நபரையும் அவதூறு செய்வது ஒரு குற்றமாக கருதப்பட முடியுமா? ஏனெனில், அது எந்த பொது நலனுக்கும் பொருந்தாது" என்று சுப்பிரமணியன் சுவாமி வழக்கில் எழுப்பப்பட்ட கேள்வியை மீண்டும் எழுப்பினார்.

‘தி வயர்’ செய்தி வலைத்தளத்தை நிர்வகிக்கும் பத்திரிகை சுதந்திரத்துக்கான அறக்கட்டளை மற்றும் ஒரு பத்திரிகையாளர் தாக்கல் செய்த மனுவை விசாரிக்கும் அமர்வுக்கு தலைமை தாங்கிய எம்.எம்.சுந்தரேஷ், ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் அமிதா சிங் தாக்கல் செய்த குற்றவியல் அவதூறு வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த சம்மனை ரத்து செய்யுமாறு உத்தரவிட்டு இந்த வாய்மொழி கருத்தை தெரிவித்தார்.

மனுதாரர்கள் சார்பாகப் பேசிய மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், பல்வேறு தனியார், தனிநபர்கள் தாக்கல் செய்த குற்றவியல் அவதூறு புகார்களின் அடிப்படையில் விசாரணை நீதிமன்றங்களால் தனக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட சம்மனை நிறுத்தி வைக்குமாறு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உச்ச நீதிமன்றத்தை பலமுறை அணுகியதைக் குறிப்பிட்டார். தற்போது இந்த அறக்கட்டளையின் மனுவானது ராகுல் காந்தி தாக்கல் செய்த வழக்குகளோடு இணைத்தும் உத்தரவிடப்பட்டது.

சமீபத்திய மாதங்களில், குற்றவியல் அவதூறு வழக்குகளில் சம்மன்களை நிறுத்தி வைக்க உச்ச நீதிமன்றத்தின் பல்வேறு அமர்வுகள் உத்தரவிட்டுள்ளன. அவற்றில் "நீதிமன்றம் அரசியல் பகைகளைத் தீர்த்துக்கொள்ள ஒரு மன்றம் அல்ல" என்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துகளையும் வெளியிட்டுள்ளன என்பது கவனிக்கத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x