Published : 22 Sep 2025 04:31 PM
Last Updated : 22 Sep 2025 04:31 PM
புதுடெல்லி: கடந்த ஜூன் 12-ம் தேதி அகமதாபாத் நகரில் நடந்த ஏர் இண்டியா விமான விபத்து தொடர்பாக நியாயமான, விரைவான விசாரணை கோரி தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசும், சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநர் ஜெனரலும் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து பிரிட்டன் தலைநகர் லண்டனை நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியாவுக்குச் சொந்தமான போயிங் 787-8 விமானம், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே மருத்துவ விடுதி வளாகத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், 241 பயணிகள் உயிரிழந்தனர். இவர்களில், 169 பேர் இந்தியர்கள், 52 பேர் பிரிட்டன் நாட்டவர்கள், 7 பேர் போர்ச்சுக்கீசியர்கள், ஒருவர் கனடா நாட்டவர். இவர்களோடு, 12 விமானப் பணியாளர்களும் உயிரிழந்தனர். இதுமட்டுமல்லாது, மருத்துவ விடுதி பகுதியில் இருந்த 19 பேரும் உயிரிழந்தனர். ஆக மொத்தம் 260 பேர் உயிரிழந்தனர். பிரிட்டன் இந்தியரான விஸ்வேஷ்குமார் ரமேஷ் என்ற பயணி மட்டும் காயங்களுடன் உயிர் பிழைத்தார்.
இந்நிலையில், இந்த விமான விபத்து தொடர்பாக நியாயமான, விரைவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் இந்த விசாரணை நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் நடைபெற வேண்டும் என்றும் கோரி முன்னாள் விமானி அமித் சிங் தலைமையிலான ‘சேஃப்டி மேட்டர்ஸ் ஃபவுண்டேஷன்’ என்ற தொண்டு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. விசாரணையின் ஆரம்பக் கட்டங்களில் சேகரிக்கப்பட்ட உண்மைத் தரவுகளை முழுமையாக வெளியிட வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதி 2017-ஐ, விபத்து தொடர்பான முதற்கட்ட அறிக்கை மீறியுள்ளது என்றும் மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சூர்ய காந்த், என்.கோடீஸ்வர் சிங் அடங்கிய அமர்வு, “அகமதாபாத் விமான விபத்து தொடர்பான விமான விபத்து புலனாய்வு பணியகத்தின் முதற்கட்ட அறிக்கை, தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் துண்டு துண்டான தகவல்களை மட்டுமே வெளியிட்டுள்ளது. இது ஒரு பொறுப்பற்ற நடவடிக்கை. விசாரணை முடியும்வரை முழுமையான ரகசியத்தை பேணுவது மிகவும் முக்கியம். இதுபோன்ற துயரங்கள், பெரும்பாலும் போட்டி விமான நிறுவனங்களால் பணமாக்கப்படுகின்றன.” என தெரிவித்துள்ளது.
மேலும், நியாயமான, சார்பற்ற, விரைவான நிபுணர் குழு விசாரணை தொடர்பாக மத்திய அரசும், சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநர் ஜெனரலும் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT