Published : 22 Sep 2025 01:07 PM
Last Updated : 22 Sep 2025 01:07 PM
புதுடெல்லி: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் நவம்பர் 5 முதல் 15 தேதிக்குள் 3 கட்டங்களாக நடைபெற வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
243 சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கொண்ட பிஹார் சட்டப்பேரவையின் பதவிக் காலம் வரும் நவம்பர் 22-ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. அதற்கு முன்பாக தேர்தலலை நடத்தி முடிக்க வேண்டிய கட்டாயம் தேர்தல் ஆணையத்துக்கு உள்ளது. கடந்த 2020-ம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் அக்டோபர் 28 முதல் நவம்பர் 7 வரை 3 கட்டங்களாக நடைபெற்றது. அக்டோபர் 28-ம் தேதி 71 தொகுதிகளுக்கும், நவம்பர் 3-ம் தேதி 94 தொகுதிகளுக்கும், நவம்பர் 7-ம் தேதி 78 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் நவம்பர் 10-ம் தேதி அறிவிக்கப்பட்டன.
அதேபோல், இம்முறையும் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது. பிஹாரின் மிகவும் முக்கியமான பண்டிகையான சாட் பூஜை அக்டோபர் 28-ம் தேதி வருகிறது. எனவே, அந்த பண்டிகைக்குப் பிறகு தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
பிஹாரில் தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்ய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அடுத்த வாரம் அம்மாநிலத்துக்குச் செல்ல உள்ளார். மேலும், பிஹாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டு அதன்படி, மாநில இறுதி வாக்காளர் பட்டியல் செப்.30-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. எனவே, ஞானேஷ் குமாரின் பிஹார் பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
பிஹார் வாக்காளர் பட்டியலில் இருந்து 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்துள்ளது. பெயர் விடுபட்டவர்கள், தகுந்த ஆவணங்களுடன் சேர்க்க தேர்தல் ஆணையம் கால அவகாசம் அளித்தது. எனவே, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும்போதுதான், எவ்வளவு வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன என்பதன் உண்மை நிலவரம் தெரியவரும். பெயர் நீக்கத்தில் முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டால், சிறப்பு தீவிர திருத்த நடைமுறை முழுமையாக ரத்து செய்யப்படும் என்று உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே எச்சரித்துள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி vs இண்டியா கூட்டணி: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் இண்டியா கூட்டணிக்கும் இடையே மீண்டும் போட்டி ஏற்பட இருக்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜன்சக்தி கட்சி(ராம்விலாஸ்) ஆகியவை இருக்கின்றன. முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் இக்கூட்டணி மீண்டும் தேர்தலை எதிர்கொள்கிறது. இண்டியா கூட்டணியில், ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
கடந்த முறை நடைபெற்ற தேர்தலில், மொத்தமுள்ள 243 தொகுதிகளில் பாஜக 80, ஐக்கிய ஜனதா தளம் 45, இந்துஸ்தானி அவாமி மோர்ச்சா(மதச்சார்பற்றது) 4 தொகுதிகளில் வெற்றி பெற்றன. தேர்தலுக்குப் பிறகு இரண்டு சுயேட்சைகள் இந்த கூட்டணியில் இணைந்தனர். இண்டியா கூட்டணி சார்பில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் 77 தொகுதிகளிலும், காங்கிரஸ் 19 தொகுதிகளிலும், சிபிஎம் 2, சிபிஐ 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT