Published : 22 Sep 2025 08:17 AM
Last Updated : 22 Sep 2025 08:17 AM
புதுடெல்லி: அருணாசல பிரதேசம், திரிபுரா மாநிலங்களில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (செப்.22) சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அப்போது அவர் ரூ.5,100 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
இதுகுறித்து பிரதமர் அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 22-ல் அருணாச்சலப் பிரதேசம் மற்றும் திரிபுரா மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அப்போது இரு மாநிலங்களிலும் ரூ.5,100 கோடிக்கும் அதிகமான பல மேம்பாட்டு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவார்.
மேலும், ஒரு பொது நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ள அவர் மக்களிடம் உரையாற்ற உள்ளார். அதன்பிறகு, திரிபுராவுக்கு புறப்பட்டு செல்லும் அவர் மாதா திரிபுர சுந்தரி கோயிலில் சாமி தரிசனம் செய்கிறார். அக்கோயிலின் மேம்பாட்டு பணிகளையும் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார்.
அருணாசல பிரதேச சுற்றுப்பயணத்தின்போது, அம்மாநிலத்தின் பரந்த நீர்மின்சார திறனை பயன்படுத்திக் கொள்ள இட்டாநகரில் ரூ. 3,700 கோடி மதிப்புள்ள இரண்டு பெரிய நீர்மின் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவார். அதன்படி, 240 மெகாவாட் திறனில் ஹியோ நீர்மின் திட்டம் மற்றும் 186 மெகாவாட் திறனில் டாட்டோ-I நீர்மின் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளன. இந்த இரண்டு திட்டங்களும் அருணாசல பிரதேசத்தின் சியோம் துணைப் படுகையில் உருவாக்கப்படும்.
9,820 அடி உ.யரத்தில்.. தவாங்கில் ஒரு அதிநவீன மாநாட்டு மையத்துக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். தவாங்கின் எல்லை மாவட்டத்தில் 9,820 அடி உயரத்தில் அமையும் இந்த மையம் தேசிய மற்றும் சர்வதேச மாநாடுகள், கலாச்சார விழாக்கள் மற்றும் கண்காட்சிகளை நடத்தவதற்கான அனைத்து வசதிகளையும் கொண்டதாக இருக்கும். இது, இப்பிராந்தியத்தின் சுற்றுலா மற்றும் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும்.
சுகாதாரம், தீயணைப்பு பாதுகாப்பு, பணிபுரியும் பெண்களுக்கான விடுதிகள், இணைப்புகளை மேம்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு உதவும் வகையில் ரூ.1,290 கோடி மதி்ப்புள்ள பல முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.
இந்தியாவின் ஆன்மிக மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்க அளித்த உறுதிப்பாட்டின்படி திரிபுராவில் மதபாரியில் உள்ள மாதா திரிபுர சுந்தரி கோயில் வளாகத்தின் மேம்பாட்டு பணிகளை பிரதமர் தொடங்கி வைக்கிறார். இது திரிபுராவின் கோமதி மாவட்டத்தின் உதய்பூர் நகரில் அமைந்துள்ள பழமையான 51 சக்தி பீடங்களில் ஒன்றாகும்.
இந்த மேம்பாட்டு திட்டத்தில், கோயில் வளாகத்தில் மாற்றங்கள், புதிய பாதைகள், புதுப்பிக்கப்பட்ட நுழைவாயில்கள் மற்றும் வேலிகள், வடிகால் அமைப்பு, ஸ்டால்கள், தியான மண்டபம், விருந்தினர் தங்குமிடங்கள், அலுவலக அறைகள் புதிய மூன்று மாடி வளாகம் உள்ளிட்டவை அடங்கும். இது சுற்றுலாவை மேம்படுத்துவதிலும், வேலைவாய்ப்பு மற்றும் வணிக வாய்ப்புகளை உருவாக்குவதிலும், பிராந்தியத்தின் ஒட்டுமொத்த சமூக-பொருளாதார வளர்ச்சிக்கும் வழிவகுக்கும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT