Published : 21 Sep 2025 05:50 PM
Last Updated : 21 Sep 2025 05:50 PM
சென்னை: “மத்திய அரசு எந்த மொழியையும் திணிக்கவில்லை. குறுகிய அரசியல் பார்வையை கொண்டவர்கள் மட்டுமே மும்மொழிக் கொள்கையை சர்ச்சையாக மாற்றுகிறார்கள்” என்றும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
சென்னை ஐஐடியில் செய்தியாளர்களிடம் பேசிய தர்மேந்திர பிரதான்: கல்வி நிதி விவகாரம் குறித்து தொடர்ந்து நான் பேசி வருகிறேன். இந்த விஷயத்தை தமிழக அரசு அரசியல் விவகாரமாக பார்க்கிறது. இது குறித்து நான் ஏற்கெனவே நாடாளுமன்றத்தில் தெளிவுபடுத்தியுள்ளேன். தேசிய கல்விக் கொள்கையை நாடே ஏற்றுக்கொண்டது. நாம் அனைவரும் அதை பின்பற்ற வேண்டும். உதாரணமாக, உத்தரப் பிரதேசத்தில், மாணவர்கள் விரும்பினால் இந்தி, ஆங்கிலம், மராத்தி அல்லது தமிழைத் தேர்வு செய்யலாம்.
தாய்மொழியுடன் ஏதாவது இரு மொழிகளை கற்கலாம் என்பதே தேசிய கல்விக்கொள்கையின் நோக்கம். மூன்றாவது மொழியாக ஏதாவது ஒரு மொழியை படிக்க சொல்கிறோம். மத்திய அரசு எந்த மாநிலத்திலும் எந்த மொழியையும் திணிக்கவில்லை. தேசியக்கல்வி கொள்கை மூன்றாவது மொழியை ஊக்குவிக்கிறது.
மும்மொழி கொள்கையில் அரசியல் நிலைப்பாடு கூடாது. குறுகிய அரசியல் பார்வையை கொண்டவர்கள் மட்டுமே மும்மொழிக் கொள்கையை ஒரு சர்ச்சையாக மாற்றுகிறார்கள். தமிழக மக்கள் தங்கள் மொழியை ஆழமாக நேசிக்கிறார்கள். நான், என் மொழியையும் நேசிக்கிறேன். அதே சமயம் மற்ற மொழிகளையும் மதிக்கிறேன்.
மொழியின் அடிப்படையில் பிரிவினைகளை உருவாக்க முயன்றவர்கள் தோல்வியடைந்துவிட்டனர். சமூகம் அதையெல்லாம் தாண்டிச் சென்றுவிட்டது. தமிழகத்துக்கு எதிராக நாங்கள் பாகுபாடு காட்டவில்லை. மதிய உணவு திட்டம் உட்பட பல்வேறு திட்டங்களுக்கு நிதி வழங்கி உள்ளது. இந்த ஆண்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கல்வி நிதி விவகாரம் தொடர்பாக என்னை சந்தித்த தமிழ்நாடு கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் மற்றும் திமுக எம்.பி. கனிமொழி ஆகிய இருவரிடமும் மத்திய அரசின் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும், அப்போதுதான் சமக்ர சிக்ஷா கல்வி நிதியை மத்திய அரசு வழங்கும் எனவும் தெளிவாகச் சொல்லிவிட்டேன். இது மாணவர்களின் நலனுக்கான விஷயம். இதில் அரசியல் கூடாது.
மும்மொழி கற்பதில் என்ன பிரச்சினை? தமிழக அரசு தனது அரசியல் நிலைப்பாட்டை மாணவர்களின் கல்வியின் மீது திணிக்க கூடாது. இவ்விவகாரத்தில், நான் அனைத்து ஒத்துழைப்பையும் கொடுக்க தயாராக இருக்கிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT