Published : 21 Sep 2025 06:59 AM
Last Updated : 21 Sep 2025 06:59 AM
புதுடெல்லி: பிஹார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதா தள கட்சியும் பாஜக.வும் சரிபாதி தொகுதியில் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிஹார் மாநில சட்டப்பேரவையில் 243 உறுப்பினர்கள் உள்ளனர். தற்போது பதவிக் காலம் முடிவதால், சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகளை தலைமை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக வெளியிடும் என்று தெரிகிறது. இந்நிலையில், பிஹாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் (ஐஜத) - பாஜக கூட்டணி தலைவர்கள், தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
ஐஜத தலைவரும் முதல்வருமான நிதிஷ்குமார் - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பிஹார் தலைநகர் பாட்னாவில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிஹார் தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தினர். முப்பது நிமிடங்கள் நடைபெற்ற அந்த ஆலோசனை கூட்டத்தில், துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி, ஐஜத மூத்த தலைவர்கள் சஞ்சய் ஜா, விஜய் குமார் சவுத்ரி உட்பட பலர் பங்கேற்றனர்.
மொத்தமுள்ள 243 தொகுதிகளில் பாஜக - ஐஜத ஆகிய கட்சிகள் 100 முதல் 102 தொகுதிகள் வரை போட்டியிட கூட்டத்தில் ஒருமனதாக ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகுதிகளில் எல்ஜேபி (ராம் விலாஸ்) கட்சிக்கு கணிசமான தொகுதிகளை வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், கடந்த 2020-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பெற்ற தொகுதிகளை விட அதிக இடங்களில் வெற்றி பெறுவதற்கான திட்டங்களை வகுக்கு ஐஜத - பாஜக தலைவர்கள் ஒப்புக் கொண்டனர். அதற்காக ஒன்றிணைந்து செயல்பட ஒப்புக் கொண்டனர்.
இதுகுறித்து ஐஜத - பாஜக கூட்டணி வட்டாரங்கள் கூறும்போது, ‘‘பிஹார் தேர்தலில் சரி சமமான தொகுதிகளில் போட்டியிட முடிவானாலும், பாஜக.வை விட ஐஜத ஒன்றிரண்டு தொகுதிகளில் கூடுதலாக போட்டியிடும். அப்போதுதான் முதல்வர் வேட்பாளர் என்ற அளவிலும், கூட்டணிக்கு தலைமை தாங்கும் கட்சி என்ற அந்தஸ்துடன் தேர்தலை சந்திக்க முடியும். சுமார் 100 -102 என்ற எண்ணிக்கையில் இரு கட்சிகளும் போட்டியிடும்.
மீதமுள்ள தொகுதிகள் எல்ஜேபி (ராம் விலாஸ்), ஹிந்துஸ்தான் அவாமி மோர்ச்சா (ஜிதன்ராம் மாஞ்சி), ராஷ்டிரிய லோக் மோர்ச்சா (உபேந்திரா குஷ்வாஹா) ஆகியவற்றுக்கு வழங்கப்படும். என்டிஏ கூட்டணிக்கு நிதிஷ் தலைமை வகித்தாலும், தேர்தலில் வெற்றி பெற்றால், அடுத்த முறையும் அவர் முதல்வர் பதவியில் நீடிப்பாரா என்பது குறித்து முடிவாகவில்லை’’ என்றனர். இதற்கிடையில், என்டிஏ கூட்டணியில் 15 முதல் 20 தொகுதிகள் வேண்டும் என்று ஜிதன் ராம் மாஞ்சி வலியுறுத்தி வருகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT