Published : 21 Sep 2025 01:16 AM
Last Updated : 21 Sep 2025 01:16 AM
புதுடெல்லி: ஹெரிடேஜ் புட்ஸ் நிறுவன பங்கு விலை உயர்வால் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மனைவியின் சொத்து மதிப்பு ஒரே நாளில் ரூ.121 கோடி உயர்ந்தது.
ஆந்திர முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திர பாபு நாயுடு குடும்பத்துக்கு சொந்தமான ஹெரிடேஜ் புட்ஸ் நிறுவனம் ஹைதராபாத்தை தலைமையகமாகக் கொண்டு செயல்படுகிறது. தென்னிந்தியாவின் முன்னணி பால் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது. பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள இதன் சந்தை மதிப்பு ரூ.5 ஆயிரம் கோடியாக உள்ளது. சந்திரபாபு நாயுடு மனைவி புவனேஸ்வரி நாரா வசம் 2.26 கோடி பங்குகள் (24.37%) உள்ளன.
இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை வர்த்தகத்தின் இடையே இந்நிறுவனத்தின் ஒரு பங்கு விலை 10% வரை உயர்ந்தது. புதன்கிழமை ரூ.485 ஆக முடிவடைந்த ஒரு பங்கின் விலை, வியாழக்கிழமை வர்த்தகத்தின் இடையே ரூ.541.60 வரை உயர்ந்தது. இறுதியில் சற்று குறைந்து ரூ.527-ல் நிலை பெற்றது. இதன் மூலம், புவனேஸ்வரியின் சொத்து மதிப்பு ஒரே நாளில் ரூ.121 கோடி உயர்ந்தது.
ஹெரிடேஜ் நிறுவனம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் விலங்குகளுக்கான உணவுப்பொருள் உற்பத்தியிலும் ஈடுபட்டுள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்நிறுவனத்தின் வருவாய் ரூ.1,136.8 கோடியாக அதிகரித்தது. இதன்மூலம் தொடர்ந்து 3-வது காலாண்டாக இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT