Published : 21 Sep 2025 01:12 AM
Last Updated : 21 Sep 2025 01:12 AM
கொச்சி: கேரளாவின் குட்டிப்புரத்தை சேர்ந்தவர் சைதலவி. முஸ்லிம் மதத்தை சேர்ந்த பார்வையற்ற இவர் மசூதிகளில் யாசகம் பெற்று வாழ்ந்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு ஜூபைரியா என்ற பெண்ணை இவர் திருமணம் செய்தார். இதன்பிறகு 2-வது திருமணம் செய்து கொண்டார். தற்போது 3-வது திருமணத்துக்கு தயாராவதாகக் கூறப்படுகிறது.
இந்த சூழலில் முதல் மனைவி ஜூபைரியா ஜீவனாம்சம் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதி குண்ணிகிருஷ்ணன் விசாரித்தார். ஜூபைரியா நீதிமன்றத்தில் கூறும்போது, “எனது கணவர் சைதலவி யாசகம் மூலம் ஒரு மாதத்தில் ரூ.25,000 -க்கும் அதிகமாக வருவாய் ஈட்டுகிறார். இதில் ரூ.10,000-ஐ எனக்கு ஜீவனாம்சமாக வழங்க வேண்டும்’’ என்று வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி குனிகிருஷ்ணன் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது: யாசகம் பெற்று வாழும் பார்வையற்ற நபரால் மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்க முடியாது. இதுதொடர்பாக எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. மனுதாரர் ஜூபைரியாவின் வாழ்வாதாரத்துக்கு தேவையான உதவிகளை மாநில அரசு வழங்க வேண்டும்.
யாசகர் சைதலவி பலதார திருமணம் செய்வதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. இரு மனைவிகளுக்கு அவர் மிரட்டல் விடுத்திருப்பதை நீதிமன்றம் மிக வன்மையாக கண்டிக்கிறது. இதுபோன்ற செயல்களில் அவர் ஈடுபடக்கூடாது. அவர் தனது 2-வது மனைவியுடன் சேர்ந்து வாழ குடும்ப நல நீதிமன்றம் தகுந்த ஆலோசனைகளை வழங்க வேண்டும். யாசகம் பெற்று வாழ்வதை தடுக்க கேரள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT