Published : 21 Sep 2025 01:10 AM
Last Updated : 21 Sep 2025 01:10 AM
பத்தனம்திட்டா: கேரள அரசும் திருவிதாங்கூர் தேவஸ்தானமும் இணைந்து நடத்தும் சர்வதேச ஐயப்ப பக்தர்கள் சங்கமம் நிகழ்ச்சி பத்தனம்திட்டா மாவட்டம் பம்பையில் நேற்று காலை தொடங்கியது. முதல்வர் பினராயி விஜயன் சங்கமத்தை தொடங்கிவைத்தார். இதில், தமிழக அமைச்சர்கள் சேகர் பாபு, பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கேரள முதல்வர் பினராயி விஜயன் பேசியதாவது: சபரிமலை ஐயப்பனை தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே இருப்பதால் 2011-12-ம் ஆண்டில் சபரிமலை மாஸ்டர் பிளான் தொடங்கப்பட்டது.
சபரிமலை மாஸ்டர் பிளான் என்பது சன்னிதானம், பம்பை, பாரம்பரிய பாதைகள், நிலக்கல் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த வளர்ச்சியை மையமாகக் கொண்டது. 2050-க்குள் இந்த திட்டங்கள் நிறைவடையும். இந்தத் திட்டத்துக்காக ரூ.1,033.62 கோடியை செலவு செய்ய கேரள அரசு முடிவு செய்துள்ளது. சன்னிதான மேம்பாட்டுக்காக முதல் கட்டமாக 2022-27-க்குள் ரூ.600.47 கோடியும், இரண்டாம் கட்டமாக 2028-33-க்குள் ரூ.100.02 கோடியும், மூன்றாம் கட்டமாக 2024-39-க்குள் ரூ.77.68 கோடியும் ஒதுக்கப்படும்.
பம்பையை பொறுத்தவரை, ரூ.207.97 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். மலையேற்றப் பாதையை மேம்படுத்த ரூ.47.97 கோடி ஒதுக்கப்படும். ஒட்டுமொத்தமாக சன்னிதானம், பம்பை, மலையேற்றப் பாதைகள் ஆகியவற்றின் மேம்பாட்டுக்காக ரூ.1,033.62 கோடி செலவிடப்பட இருக்கிறது. இந்தத் திட்டத்தில் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்த உள்ளோம். இவ்வாறு முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT