Published : 21 Sep 2025 12:51 AM
Last Updated : 21 Sep 2025 12:51 AM
பாவ்நகர்: ‘‘பிற நாடுகளைச் சார்ந்திருப்பதுதான் இந்தியாவின் முக்கிய எதிரி. நாம் சந்திக்கும் நூற்றுக்கணக்கான பிரச்சினைகளுக்கு ஒரே மருந்து தற்சார்பு இந்தியாதான்’’ என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
குஜராத்தின் பாவ்நகரில் ‘சமுத்ர சே சம்ரிதி’ (கடலில் இருந்து வளம்) நிகழ்ச்சியை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். அப்போது ரூ.34,200 கோடி மதிப்பிலான கடல்சார் மற்றும் பிராந்திய வளர்ச்சி திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: விஸ்வபந்து (உலகின் நண்பன்) என்ற உணர்வுடன் நாடு தற்போது முன்னேறிக் கொண்டிருக்கிறது. இந்த உலகில் நமக்கு முக்கிய எதிரிகள் யாரும் இல்லை. பிற நாடுகளைச் சார்ந்திருப்பதுதான் நமது மிகப் பெரிய எதிரி. இதை நாம் தோற்கடிக்க வேண்டும். வெளிநாடுகளைச் அதிகம் சார்ந்திருப்பது, நமது தோல்வியைத்தான் காட்டுகிறது. உலகளாவிய அமைதி, நிலைத்தன்மை, செழிப்பு ஆகியவற்றுக்கு உலகின் அதிக மக்கள் தொகையை கொண்ட இந்தியா தற்சார்பு நாடாக மாற வேண்டும்.
நாம் பிறநாடுகளைச் சார்ந்திருந்தால், நமது சுய கவுரவம்தான் பாதிக்கும். 140 கோடி மக்களின் எதிர்காலத்தை நாம் பிறரிடம் விட முடியாது. மற்றவர்களை சார்ந்திருக்க கூடாது. எதிர்கால தலைமுறையினரின் எதிர்காலத்தை நம்மால் அபாய கட்டத்தில் விட முடியாது. நமது நூற்றுக்கணக்கான பிரச்சினைகளுக்கு ஒரே மருந்து தற்சார்பு இந்தியாதான்.
இதற்கு முன்பு ஆட்சி செய்த காங்கிரஸ் அரசு, நாட்டின் பலத்தை நீண்ட காலமாக அறியவில்லை. உலகமயமாக்கல் தொடங்கிய போது, இறக்குமதி பாதையை அந்த அரசு தேர்ந்தெடுத்தது. மேலும் பல கோடி மதிப்பிலான ஊழல்களிலும் ஈடுபட்டது. நாட்டின் உண்மையான பலத்துக்கு காங்கிரஸின் கொள்கை தடையாக இருந்தது.
கடல்வளத்திலிருந்து தொடங்கும் இந்தியாவின் பயணத்தை வெளிக்காட்டும் இந்த முக்கிய நிகழ்ச்சியின் மையமாக பாவ்நகர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. எனது 75-வது பிறந்தநாளை முன்னிட்டு குஜராத்தில் 1 லட்சம் பேர் ரத்த தானம் வழங்கியுள்ளனர். பல நகரங்களில் தூய்மை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குஜராத்தில் 30,000-க்கும் மேற்பட்ட இடங்களில் மருத்துவ முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் நன்றி. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT