Published : 20 Sep 2025 04:30 PM
Last Updated : 20 Sep 2025 04:30 PM
பவநகர் (குஜராத்): உலகில் நமக்கு எந்த பெரிய எதிரியும் இல்லை. நமது ஒரே உண்மையான எதிரி, மற்ற நாடுகளைச் சார்ந்திருப்பதுதான் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத்தின் பவநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "இந்தியா தற்சார்பு அடைய வேண்டும். அதற்கான தன்னம்பிக்கையை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். உலகில் நமக்கு எந்த பெரிய எதிரியும் இல்லை. நமது ஒரே உண்மையான எதிரி என்பது மற்ற நாடுகளைச் சார்ந்திருப்பதுதான். இதுவே நமது மிகப் பெரிய எதிரி. நாம் ஒன்றாக இந்த எதிரியை தோற்கடிக்க வேண்டும்.
வெளிநாடுகளைச் சார்ந்து இருப்பது அதிகமாக இருந்தால், நாட்டின் தோல்வி அதிகமாகும். உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நமது நாட்டில் அமைதி, ஸ்திரத்தன்மை, செழிப்பை பேணுவதற்கு தற்சார்பு அவசியம். சிப்கள் முதல் கப்பல்கள் வரை அனைத்தையும் நாம் தயாரிக்க வேண்டும். இந்தியாவின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வாக ஒரே ஒரு மருந்து மட்டுமே உள்ளது. தன்னம்பிக்கையே அந்த மருந்து.
தேசத்தின் முதுகெலும்பாக செயல்படுபவை நமது துறைமுகங்கள். இந்திய துறைமுகங்களுக்கு புதிய சீர்திருத்தங்களை நாங்கள் கொண்டு வர உள்ளோம். 'ஒரு தேசம், ஒரு ஆவணம்' மற்றும் 'ஒரு தேசம், ஒரு துறைமுக செயல்பாடு' ஆகியவை வர்த்தகத்தை எளிதாக்கும். கடந்த கால காங்கிரஸ் ஆட்சி, பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து இந்தியர்களின் உள்ளார்ந்த திறமைகளை அக்கட்சி அடக்கியது.
இந்திய தன்னம்பிக்கையின் எடுத்துக்காட்டு ஐஎன்எஸ் விக்ராந்த். 40-க்கும் மேற்பட்ட கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் நமது பாதுகாப்புப் படையில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. ஒரு சிலவற்றைத் தவிர அனைத்துமே இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை. வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பொருட்களை அனுப்ப இந்தியா ஆண்டுதோறும் செலுத்தும் தொகை ரூ. 6 லட்சம் கோடி. இது ஏறக்குறைய நமது பாதுகாப்பு பட்ஜெட்டுக்கு இணையானது" என தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT