Published : 20 Sep 2025 09:47 AM
Last Updated : 20 Sep 2025 09:47 AM
புதுடெல்லி: எச்.எஸ். கவுரவ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் கூறியிருப்பதாவது: சாமுண்டீஸ்வரி கோயிலில் மைசூரு தசரா விழாவை தொடங்கி வைப்பவர் இந்துவாக இருக்க வேண்டும்.
ஆனால், இவ்விழாவை தொடங்கிவைக்க அழைக்கப்பட்டுள்ள எழுத்தாளர் பானு முஷ்டாக் முஸ்லிம் என்பதால் இந்து மதப் பூஜைகளைச் செய்ய முடியாது. இது மரபை மீறுவதாகும். இதனால் இந்துக்களின் உணர்வுகள் புண்படும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
இந்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோர் அமர்வு நேற்று விசாரித்தது. அப்போது நீதிபதிகள், அரசமைப்பு சாசன முகப்புரை என்ன சொல்கிறது? அரசு நடத்தும் விழாவில் எப்படி பாகுபாடு இருக்க முடியும்? என்று கேட்டனர். மனுதாரர் தரப்பு மூத்த வழக்கறிஞர் பி.பி. சுரேஷ் ஆஜராகி, கோயிலுக்குள் நடக்கும் பூஜை மதசார்பற்றதாகி விடாது.
பூஜை என்பது மைசூர் தசரா விழாவின் ஒரு பகுதியாகும். விழாவுக்கு அழைக்கப்படும் நபர் எங்கள் மதத்துக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார். இதுபோன்ற சூழலில் அவரை அழைக்க முடியாது என வாதிட்டார்.
வழக்கறிஞரின் வாதத்தை நிராகரித்த நீதிபதிகள், மைசூரு தசராவை தொடங்கி வைக்க புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளர் பானு முஷ்டாக் அழைக்கப்பட்டதை எதிர்த்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT