Last Updated : 19 Sep, 2025 12:21 PM

3  

Published : 19 Sep 2025 12:21 PM
Last Updated : 19 Sep 2025 12:21 PM

தேர்தல்களை ஹேக்கர்களிடம் ஒப்படைக்க முடியுமா? - வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து திக்விஜய் சிங் சந்தேகம்

புதுடெல்லி: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி நடப்பதாகக் குற்றம் சாட்டியுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங், நாட்டின் தேர்தல்களை ஹேக்கர்களிடம் ஒப்படைக்கலாமா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஹேக் செய்யப்படுவது தொடர்பான ஒரு செய்தியை பகிர்ந்து திக்விஜய் சிங் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், ‘இன்றைய மேம்பட்ட தொழில்நுட்ப யுகத்தில் நாட்டின் தேர்தல்களை ஹேக்கர்களிடம் ஒப்படைக்க முடியுமா? சற்று யோசித்துப் பாருங்கள். வாக்குச் சீட்டுகளைப் பயன்படுத்தி இந்தியாவின் தேர்தல்களை நடத்த வேண்டாமா?.

அல்லது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் விவிபாட் (VVPAT) சீட்டை நம் கைகளில் கொடுக்க வேண்டாமா?. தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் எழுப்பும் இந்தக் கோரிக்கை நியாயமானதல்லவா? சற்று யோசித்துப் பாருங்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.

நேற்று டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராகுல் காந்தி, “ ‘வாக்கு திருட்டு 2.0’ தகவலை தற்போது ஆதாரத்துடன் வெளியிடுகிறேன். நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி செல்வாக்காக இருக்கும் பகுதிகளில் லட்சக்கணக்கான வாக்காளர்களை ஆன்லைன் மூலம் நீக்கும் மோசடியை ஒரு கும்பல் திட்டமிட்டு செயல்படுத்துகிறது. கர்நாடகாவின் ஆலந்த் தொகுதியில் 6,018 வாக்காளர்களை நீக்கும் முயற்சி நடந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது நீக்கப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கையில் ஒரு சிறு பகுதியாக இருக்கலாம்.

கோதாபாய் என்ற பெண்ணின் பெயரைப் பயன்படுத்தி உள்நுழைவு (லாகின்) அடையாள எண் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அவருக்கு தெரியாமலேயே 12 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. போலி உள்நுழைவு அடையாள எண், சந்தேகத்துக்குரிய, வெளிமாநில செல்போன் எண்களை பயன்படுத்தி இந்த மோசடி நடந்துள்ளது. அதேபோல, சூர்யகாந்த் என்பவரது பெயரில் இருந்து 14 நிமிடங்களில், 12 வாக்காளர்களை நீக்குவதற்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு நீக்கப்பட்ட வாக்காளர்கள் சூர்யகாந்த், பபிதா சவுத்திரி ஆகியோர் உங்கள் முன்புதான் உள்ளனர்.(அவர்களை மேடையில் அறிமுகம் செய்தார்.)

மகாராஷ்டிராவின் ராஜுரா சட்டப்பேரவை தொகுதியில் போலியாக வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். ஒரு வாக்காளரின் பெயர் ‘YUH UQJJW’ எனவும் அவரது முகவரி ‘sasti, sasti’ என்றும் உள்ளது. கர்நாடகா, மகாராஷ்டிரா, பிஹார், ஹரியானா, உத்தர பிரதேசத்தில் இதே முறையில் வாக்காளர் பட்டியலில் மோசடி நடந்துள்ளது. இதன் பின்னணியில் உள்ளவர்களை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பாதுகாக்கிறார்’ என்று கூறினார்

ஆதாரமற்ற குற்றச்சாட்டு என தேர்தல் ஆணையம் மறுப்பு: ராகுல் காந்தியின் குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதாவது: ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் தவறானவை, ஆதாரமற்றவை. அவர் கூறுவதுபோல வாக்காளர் பட்டியலில் இருந்து எந்தவொரு பெயரையும் ஆன்லைனில் நீக்க முடியாது. தவிர, பாதிக்கப்படும் நபரின் கருத்தை அறியாமல் அவரது பெயரை யாரும் நீக்க முடியாது.

2023-ல் கர்நாடகாவின் ஆலந்த் சட்டப்பேரவை தொகுதியில் வாக்காளர்களின் பெயர்களை நீக்க சில முயற்சிகள் நடந்தன. ஆனால், அவை தோல்வியில் முடிந்தன. இதுதொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்தால் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. ஆலந்த் தொகுதியில் 2018-ல் பாஜகவின் சுபாத் குட்டேதரும், 2023-ல் காங்கிரஸ் கட்சியின் பி.ஆர்.பாட்டீலும் வெற்றி பெற்றனர். இவ்வாறு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x