Published : 19 Sep 2025 11:36 AM
Last Updated : 19 Sep 2025 11:36 AM
ஹைதராபாத்: அமெரிக்காவில் தெலங்கானாவை சேர்ந்த 30 வயதான மென்பொருள் தொழில்நுட்ப வல்லுநர் போலீஸாரால் கடந்த 3-ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். இந்நிலையில், அவரது உடலை தாயகம் கொண்டு வர வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரின் உதவியை அணுகி உள்ளனர். இதன் மூலம் இந்திய தூதரகத்தின் துணை அவர்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கின்றனர்.
தெலங்கானா மாநிலத்தின் மஹபூப்நகரைச் சேர்ந்தவர் முகமது நிசாமுதீன். அமெரிக்காவின் கலிபோர்னியாவில் அவர் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் அவர் தங்கியிருந்த அறையில் உடன் இருந்தவருடன் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பில் முடிய, அவர் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதை போலீஸார் உறுதி செய்துள்ளனர்.
அவர் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்த தகவல் வியாழக்கிழமை அன்றுதான் அவரது குடும்பத்தினருக்கு தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் மகனை இழந்து வாடும் அவரது அப்பா முகமது ஹஸ்னுதீன், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி உள்ளார்.
“எனது மகன் முகமது நிசாமுதீன் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட தகவல் எங்களுக்கு வியாழன் அன்றுதான் கிடைத்தது. எனது மகனின் உடல் கலிபோர்னியாவின் சான்டா கிளாரா பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் வைக்கப்பட்டுள்ளது. எனது மகனை போலீஸார் ஏன் சுட்டுக் கொன்றனர் என தெரியவில்லை” என மத்திய அமைச்சர் ஜெய்சங்கரிடம் ஹஸ்னுதீன் முறையிட்டுள்ளார். மேலும், தனது மகனின் உடலை இந்தியா கொண்டுவர தூதரக உதவி வேண்டுமெனவும் அதில் குறிப்பிட்டுள்ளதாக தகவல்.
போலீஸ் துப்பாக்கி சூடு நடத்த காரணம் என்ன? - தனது மகன் தங்கியிருந்த அறையில் உடன் இருந்தவருடன் சிறிய பிரச்சினை ஏற்பட்ட நிலையில், அதனால் வெடித்த மோதல் காரணமாக இந்த சம்பவம் நடந்ததாக நிசாமுதீனின் மகன் ஹஸ்னுதீன் வசம் கூறியுள்ளார்.
அறையில் இருந்த ஏசி காரணமாக நிசாமுதீன் மற்றும் அவருடன் தங்கி இருந்தவருக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இருவரும் கத்தியை வைத்துக்கொண்டு மோதலில் ஈடுபட்டுள்ளனர். அப்போது போலீஸார் அறைக்குள் நுழைந்து, கைகளை கட்டுமாறு கூறியுள்ளனர். அதை ஒருவர் செய்துள்ளார். மற்றொருவர் செய்யவில்லை. இந்நிலையில், துப்பாக்கியால் போலீஸார் சுட்டதில் நிசாமுதீன் உயிரிழந்தார். இதை ஏற்றுக் கொள்ள முடியாது. உரிய விசாரணை செய்திருக்க வேண்டும் என உயிரிழந்த நிசாமுதீனின் உறவினர் ஒருவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
அவசர உதவி எண்ணுக்கு கத்திக்குத்து குறித்த தகவல் கிடைத்ததை தொடர்ந்து போலீஸார் முகமது நிசாமுதீன் தங்கியிருந்த அறைக்கு சென்றனர். அங்கு அவர் கத்தியை கொண்டு உடன் இருந்தவரை தாக்கியது தெரிந்தது. பின்னர் துப்பாக்கி சூடு நடந்தது. தொடர்ந்து இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அங்கு நிசாமுதீன் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கத்திக்குத்தில் காயமடைந்தவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணையை மேற்கொண்டு வருகிறோம் என அமெரிக்க போலீஸார் கூறியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT