Published : 19 Sep 2025 07:43 AM
Last Updated : 19 Sep 2025 07:43 AM
பெங்களூரு: கர்நாடக முன்னாள் முதல்வரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சதானந்த கவுடாவின் வங்கிக் கணக்கை ஆன்லைன் மூலம் ஹேக் செய்து ரூ.3 லட்சம் திருடப்பட்டு உள்ளது. இதுகுறித்து பெங்களூரு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து முன்னாள் முதல்வர் சதானந்த கவுடா பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதன்கிழமை காலையில் எனது செல்போனுக்கு 3 வங்கிகளிடம் இருந்து குறுஞ்செய்தி வந்தது. அதில் ஒவ்வொரு வங்கியில் இருந்தும் தலா ரூ.1 லட்சம் எடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டிருந்தது. இதையடுத்து செல்போன் செயலி மூலம் வங்கி கணக்கை ஆராய்ந்தபோது, எனது வங்கி கணக்குகள் மூன்றும் ஹேக் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
உடனடியாக பெங்களூரு வடக்கு மண்டல துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளேன். எனக்கு வங்கி கணக்குகள் தொடர்பாக யாருக்கும் தகவல் தெரிவிக்கவில்லை. அதேபோல எந்த லிங்கையும் கிளிக் செய்யவில்லை. ஆன்லைன் மோசடி கும்பல், எப்படி எனது வங்கி கணக்கை ஹேக் செய்தார்கள் என தெரியவில்லை. போலீஸார் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறேன். இவ்வாறு சதானந்த கவுடா தெரிவித்தார்.
இந்த ஆன்லைன் மோசடி குறித்து பெங்களூரு வடக்கு மண்டல போலீஸார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். முதல்கட்டமாக சதானந்த கவுடாவின் வங்கி கணக்குகள், ஆன்லைன் பணப் பரிமாற்றம் உள்ளிட்டவற்றை ஆராய்ந்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு கன்னட நடிகர் உபேந்திரா, அவரது மனைவியும் நடிகையுமான பிரியங்கா திரிவேதி ஆகியோரின் செல்போன் எண்கள் ஹேக் செய்யப்பட்டு ரூ.55 ஆயிரம் மோசடி செய்யப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT