Last Updated : 18 Sep, 2025 08:16 PM

 

Published : 18 Sep 2025 08:16 PM
Last Updated : 18 Sep 2025 08:16 PM

‘வாக்குத் திருட்டு’ விவகாரத்தில் ராகுல் காந்தி தீவிரம்: பிஹார் தேர்தலில் ‘தாக்கம்’ சாத்தியமா?

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், அம்மாநிலத்தில் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி, அதன் ஒரு பகுதியாக, நாட்டின் சில பகுதிகளில் இதற்கு முன் நடந்த 'வாக்குத் திருட்டு' குறித்தும் 'ஆதாரங்களை' வெளிப்படுத்தி பிரச்சாரம் செய்து வருகிறார். அவரது இந்த முயற்சி, பிஹார் தேர்தலில் தாக்கம் தருமா என்ற கேள்வி எழுகிறது.

'Vote chori' அதாவது 'வாக்கு திருட்டு' - கடந்த சில வாரங்களாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்ட தீவிர பிரச்சாரத்தால், நாடு முழுவதும் அதிகம் பேசப்படும் சொல்லாடல் இது. இந்திய தேர்தல் ஆணையம் பிஹாரில் மேற்கொண்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை வலிமையாக எதிர்க்க வகுக்கப்பட்ட உத்தியின் எளிமையான வெளிப்பாடு இது. 'Vote chori' அல்லது 'வாக்கு திருட்டு' என்பது இரண்டே வார்த்தைதான். ஆனால், அதன் வீச்சு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

முதலில், சிறப்பு தீவிர திருத்தத்தின் மூலம் வாக்காளர்கள் பலரின் பெயர்கள் நீக்கப்படுவதாகக் குற்றம் சாட்டினார் ராகுல் காந்தி. சிறப்பு தீவிர திருத்தம் கைவிடப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி அவர் தீவிர பிரச்சாரங்களை மேற்கொண்டார். இண்டியா கூட்டணி கட்சிகளும் அவருக்கு ஆதரவாக நின்றன. பின்னர் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் ஜூலை 21-ம் தேதி தொடங்கியது முதல் ஆகஸ்ட் 21-ம் தேதி முடிவடையும் வரை இண்டியா கூட்டணி கட்சிகள் இந்த விவகாரத்தை தொடர்ந்து நாடாளுமன்றத்துக்கு உள்ளே எழுப்பி அமளியில் ஈடுபட்டன. இதனால், கூட்டத் தொடர் ஏறக்குறைய முடங்கியது. அவைக்கு உள்ளே மட்டுமல்லாது, அவைக்கு வெளியேயும் நாள்தோறும் போராட்டங்களை முன்னெடுத்தன எதிர்க்கட்சிகள்.

இதன் தொடர்ச்சியாகவே, 'வாக்கு திருட்டு' பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படுவதையே 'வாக்கு திருட்டு' என குறிப்பிட்டார் ராகுல் காந்தி. இது குறித்து பிஹார் வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஆகஸ்ட் 17-ம் தேதி முதல் செப்டம்பர் 1-ம் தேதி வரை 'வாக்காளர் அதிகார யாத்திரை'யை அவர் மேற்கொண்டார். இந்த யாத்திரையில் இண்டியா கூட்டணியில் உள்ள கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்றதை அடுத்து இதன் தாக்கம் மேலும் அதிகரித்தது.

'வாக்குத் திருட்டு' குறித்த செய்திகள் தொடர்ந்து மக்களைச் சென்றடைய ராகுல் காந்தி தொடர்ந்து தீவிரம் காட்டி வருகிறார். பிரதமர் நரேந்திர மோடி செப்.13-ம் தேதி மணிப்பூர் செல்ல இருப்பது குறித்து செப்.12-ம் தேதி ராகுல் காந்தியிடம் செய்தியாளர்கள் கேட்டபோதுகூட, “மணிப்பூரில் பிரச்சினை நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. அவர் இப்போது அங்கு செல்வது நல்லது. ஆனால், நாட்டின் முக்கிய பிரச்சினை வாக்கு திருட்டுதான். ஹரியாணா மற்றும் மகாராஷ்டிராவில் தேர்தல் முடிவுகள் திருடப்பட்டன. தற்போது எல்லா இடங்களிலும் மக்கள் ‘வாக்குத் திருட்டு’ பற்றித்தான் பேசுகிறார்கள்” என கூறியவர் ராகுல் காந்தி. அந்த அளவுக்கு அவரது கவனம் இதில் மையம் கொண்டிருக்கிறது.

'வாக்குத் திருட்டு' குறித்து டெல்லியில் இன்று (செப்.18) செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, "கர்நாடகாவின் ஆலந்த் சட்டப்பேரவைத் தொகுதியில் 6,018 வாக்காளர்களின் பெயர்கள் ஆன்லைன் முறையில் நீக்கப்பட்டுள்ளன. இத்தகைய நீக்கங்கள் தனி மனிதர்களின் பிழைகள் அல்ல. மாறாக, மென்மொருட்களையும் மொபைல் போன்களையும் தவறாகப் பயன்படுத்தி திட்டமிட்ட முறையிலும் ஒருங்கிணைக்கப்பட்ட முறையிலும் நடத்தப்பட்டவை. இது சாதாரண பணியாளர் மட்டத்தில் நடத்தப்படவில்லை. இந்த நடவடிக்கை காங்கிரஸின் கோட்டைகளைக் குறிவைத்து நடத்தப்பட்டுள்ளன.

இது தொடர்பாக கர்நாடக சிஐடி 18 மாதங்களில் தேர்தல் ஆணையத்துக்கு 18 கடிதங்களை அனுப்பி உள்ளது. ஆன்லைன் முறையில் பெயர்களை நீக்கியவர்கள் குறித்த தரவுகள் தேர்தல் ஆணையத்திடம் உள்ளது. அந்த தரவுகளை சிஐடி கேட்கிறது. ஆனால், அதை தர தேர்தல் ஆணையம் மறுக்கிறது. தரவுகளை தந்தால் பெயர்களை நீக்கியவர்கள் யார் என்பது தெரிந்துவிடும் என்பதால்தான், தேர்தல் ஆணையம் மறுக்கிறது. இதன்மூலம் தேர்தல் ஆணையம், அவர்களை பாதுகாக்கிறது.

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்வர் குமார், வாக்கு மோசடி செய்பவர்களை காப்பாற்றுகிறார். அதன்மூலம் நாட்டின் ஜனநாயகத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறார். இந்த குற்றச்சாட்டை நான் எளிதாக முன்வைக்கவில்லை. மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையிலேயே முன்வைக்கிறேன்" என தெரிவித்திருந்தார்.

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளுக்கு கடுமையான வார்த்தைகளில் பதில் அளித்துள்ள இந்திய தேர்தல் ஆணையம், “ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கள் தவறானவை, ஆதாரமற்றவை. இந்திய தேர்தல் ஆணையத்தின் உண்மை சரிபார்க்கும் குழு இதனை உறுதிப்படுத்துகிறது. ராகுல் காந்தி கருதுவதைப் போல, எந்த ஒரு வாக்காளரையும் எவர் ஒருவரும் ஆன்லைனில் நீக்க முடியாது. உரிய நடைமுறை இல்லாமல், எந்தவொரு வாக்காளரையும் பட்டியலில் இருந்து நீக்க முடியாது.

கடந்த 2023-ல் கர்நாடகாவின் ஆலந்த் தொகுதியில் வாக்காளர்களை மோசடியாக நீக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. எனினும், அந்த முயற்சி தோல்வி அடைந்தது. இந்த விவகாரம் குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையமே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. தேர்தல் ஆணைய ஆவணங்களின்படி, 2018 தேர்தலில் பாஜகவின் சுபாஷ் குட்டேதர் வெற்றி பெற்றார், 2023-ல் காங்கிரஸ் கட்சியின் பி.ஆர்.பாட்டீல் வெற்றி பெற்றார்” என தெரிவித்துள்ளது.

'வாக்குத் திருட்டு' குறித்த ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு தீவிரமடைந்து வருவதை அடுத்து, பாஜகவும் தீவிரமாக எதிர்வினையாற்றத் தொடங்கி இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடியின் 75-வது பிறந்த தினத்தை முன்னிட்டு டெல்லியில் நேற்று (செப்.17) நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "வாக்காளர் பட்டியலை தூய்மைப்படுத்தும் நோக்கில் இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் சிறப்பு தீவிர திருத்தத்தை பாஜக உறுதியாக ஆதரிக்கிறது.

வாக்காளர் பட்டியலில் இருந்து ஊடுருவல்காரர்கள் நீக்கப்பட வேண்டும். சட்டவிரோதமாக குடியேறிவர்களை தேர்தல் வெற்றிக்காக ராகுல் காந்தி பாதுகாக்க முயல்கிறார். அதற்காகவே அவர் பிஹாரில் யாத்திரை மேற்கொண்டார். ஊடுருவியவர்கள் நாட்டிலேயே தங்கி இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். ஏனெனில், அவர்களுக்கு சொந்த நாட்டு மக்கள் மீது நம்பிக்கையில்லை. ஊடுவியவர்கள் மூலம் தேர்தலில் வெற்றி பெற அவர்கள் விரும்புகிறார்கள்" என விமர்சித்திருந்தார்.

இந்நிலையில், பிஹாரின் ரோட்டாஸ் நகரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய அமித் ஷா, வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவியர்களைப் பாதுகாக்கும் நோக்கிலேயே வாக்குத் திருட்டு எனும் கதையை ராகுல் காந்தி பரப்புவதாக கடுமையாக விமர்சித்தார்.

“அவர்கள் (காங்கிரஸ்) ஒவ்வொரு முறையும் தவறான கதையை பரப்புகிறார்கள். ராகுல் காந்தி பிஹாரில் ஒரு யாத்திரை மேற்கொண்டார். அந்த யாத்திரையின் தலைப்பு வாக்கு திருட்டு அல்ல. நல்ல கல்வி, வேலைவாய்ப்பு, மின்சார வசதி, சாலை வசதி ஆகியவற்றை வலியுறுத்தியும் அந்த யாத்திரை நடத்தப்படவில்லை. அந்த யாத்திரையின் நோக்கம் வங்கதேசத்தில் இருந்து வந்த ஊடுருவல்காரர்களைக் காப்பாற்றுவதாகும். உங்களில் யாராவது வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளீர்களா? இல்லை. இது முழுக்க முழுக்க ஊடுருவல்காரர்களை பாதுகாக்கும் யாத்திரை.

ஊடுருவல்காரர்களுக்கு வாக்களிக்கும் உரிமை அளிக்கப்பட வேண்டுமா? அவர்களுக்கு இலவச ரேஷன் வழங்கப்பட வேண்டுமா? அவர்களுக்கு வேலை வழங்கப்பட வேண்டுமா? வீடு வழங்கப்பட வேண்டுமா? ரூ.5 லட்சம் வரையிலான காப்பீடு மூலம் இலவச சிகிச்சை வழங்கப்பட வேண்டுமா? நமது இளைஞர்களுக்காக அல்லாமல், வாக்கு வங்கி ஊடுருவல்காரர்களுக்காக வேலை வாய்ப்பை வழங்குகிறார் ராகுல் காந்தி. தப்பித் தவறி அவர்களின் அரசாங்கம் அமைந்துவிட்டால் பிஹாரின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஊடுருவல்காரர்கள் மட்டுமே இருப்பார்கள். எனவே, இது குறித்து வீடு வீடாகச் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்” என அமித் ஷா தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய அமைச்சரும் அக்கட்சியின் மூத்த தலைவருமான அனுராக் தாக்குர், “அரசியலமைப்பு நிறுவனங்கள் மீது ராகுல் காந்தி தொடர்ந்து குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது அவருக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லை என்பதையே காட்டுகிறது.

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு தவறானது, ஆதாரமற்றது என கூறி தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது. ஊடுருவல்காரர்களுக்கே முதல் முன்னுரிமை என்பதே ராகுல் காந்தியின் திட்டமாகத் தெரிகிறது. சட்டவிரோத வாக்காளர்களைப் பாதுகாப்பது என்ற காங்கிரஸின் திட்டத்தை அனுமதித்தால், எஸ்.சி, எஸ்.டி, ஓபிசி மக்களின் நலன்கள் மிகவும் பாதிக்கப்படும்" என விமர்சித்துள்ளார்.

சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதுமட்டுமல்லாது, சிறப்பு தீவிர திருத்தத்தை மேற்கொள்ள தேர்தல் ஆணையத்துக்கு தடை விதிக்க முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கின் அடுத்த விசாரணையை அக்டோபர் 7-ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

பிஹாரில் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்களின் பதவிக் காலம் நவம்பர் 22-ம் தேதியோடு முடிவடைவதால், அதற்கு முன்பாக தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். எனவே, அதற்குள் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாகுமா என்பது சந்தேகமே.

நீதிமன்றத்தின் தீர்ப்பு எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாக இருந்தால், அது இந்த தேர்தலில் அவர்களுக்கு மிகப் பெரிய ஆதாயத்தை வழங்கக் கூடும். அது இல்லாத நிலையில், ராகுல் காந்தியின் இந்த முயற்சி சிறுபான்மை - பெரும்பான்மை என்பதாக மாறி அவருக்கும் அவரது அணிக்கும் எதிராக திரும்பவும் வாய்ப்பு உள்ளதாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x