Published : 18 Sep 2025 06:30 PM
Last Updated : 18 Sep 2025 06:30 PM
புதுடெல்லி: பிஹாரில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிய நிலையில், பட்டப்படிப்பை முடித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.
பிஹாரில் நவம்பர் மாதத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதற்கு அனைத்து கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன. தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிய நிலையில், ‘சார்’ எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் விவகாரம் இந்திய அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது. இதற்கிடையே, பிஹாரில் எப்படியாவது ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள முயற்சித்து வருகிறார் அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார்.
தேர்தலுக்கு முன்னதாக, இளம் வாக்காளர்களையும், பெண்களையும் கவரும் விதமாக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார். அந்த வகையில், பெண்கள் தொழில் தொடங்க ரூ.2 லட்சம் வரை நிதியுதவி, மாணவர்களுக்கு வட்டியில்லா கல்விக் கடன் உள்ளிட்ட திட்டங்களையும் ஏற்கெனவே அவர் அறிவித்திருந்தார். இந்நிலையில், தற்போது அவர் தனது எக்ஸ் தளத்தில், “பிஹாரில் தற்போது 'முதல்வரின் நிச்சயம் சுயம் சகாயத பட்டா யோஜனா' என்ற திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
முன்னர், இந்தத் திட்டத்தின் கீழ், பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று உயர் கல்வி படிக்க முடியாத வேலையில்லாத இளைஞர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சுய உதவித் திட்டத்தின் பலன், இப்போது கலை, அறிவியல் மற்றும் வணிகப் பிரிவைச் சேர்ந்த வேலையில்லாத ஆண் மற்றும் பெண் பட்டதாரி இளைஞர்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், 20 முதல் 25 வயதுக்குட்பட்ட வேலையில்லா பட்டதாரி இளைஞர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகையாக வழங்கப்படும். வேலையில்லா இளைஞர்களுக்கு இந்த உதவித்தொகை உதவிகரமாக இருக்கும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT