Published : 18 Sep 2025 05:56 PM
Last Updated : 18 Sep 2025 05:56 PM
புதுடெல்லி: ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விதித்த 25% வரி, வரும் நவம்பர் மாதத்துக்குப் பிறகு திரும்பப் பெறப்படலாம் என்று தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி. அனந்த நகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், "இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வரி பதற்றங்களை சரி செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாங்கள் அனைவரும் இதற்கான பணியில் இருக்கிறோம். 25% பரஸ்பர வரி, 25% அபராத வரி இரண்டுமே எதிர்பாராதது. புவிசார் அரசியல் சூழ்நிலை, இரண்டாவது 25% வரி விதிப்புக்கு காரணமாக இருக்கலாம் என்று நான் இன்னமும் நம்புகிறேன்.
கடந்த இரண்டு வாரங்களில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் உள்பட பலவற்றை கருத்தில் கொண்டுநான் அதை நம்புகிறேன். மேலும், நவம்பர் 30-க்குப் பிறகு அபராத வரி இருக்காது என்று நான் நம்புகிறேன். இதற்கு குறிப்பிட்ட காரணம் எதுவும் சொல்வதற்கு இல்லை" என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, அமெரிக்க அதிபராக 2-வது முறையாக பொறுப்பேற்ற டொனால்டு ட்ரம்ப், அமெரிக்கா ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு உலக நாடுகள் விதிக்கும் வரிக்கு ஏற்ப பதில் வரி விதிக்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி, இந்திய பொருட்கள் மீது ட்ரம்ப் 25% வரி விதித்தார். இது ஆகஸ்ட் 7-ம் தேதி அமலுக்கு வந்தது. அத்துடன், ரஷ்யாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதாக கூறி கூடுதலாக 25% வரி விதித்தார். இது ஆகஸ்ட் 27-ம் தேதி அமலுக்கு வந்தது. இதன்மூலம், இந்திய பொருட்கள் மீது 50% வரி விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இரு நாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டது.
இதனிடையே, சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். ட்ரம்பின் வரி விதிப்பால், சீனாவுடன் இந்தியா நெருங்கி வருவதாக அமெரிக்காவை சேர்ந்த நிபுணர்கள் குற்றம்சாட்டினர். இதையடுத்து, இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட தடைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறும் என ட்ரம்ப் சில நாட்களுக்கு முன்பு கூறியிருந்தார். இதை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றிருந்தார்.
இதையடுத்து, இந்தியா - அமெரிக்கா இடையே இருதரப்பு வர்த்தகம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்காவின் வர்த்தகத் துறை துணை பிரதிநிதி (தெற்கு மற்றும் மத்திய ஆசியா) பிரெண்டன் லிஞ்ச் தலைமையிலான குழுவினர் கடந்த 16-ம் தேதி டெல்லி வந்தனர். இரு தரப்பு வர்த்தக பேச்சுவார்த்தைக்கான இந்திய பிரதிநிதியும், மத்திய வர்த்தகத் துறை சிறப்பு செயலருமான ராஜேஷ் அகர்வால் தலைமையிலான குழுவினரை லிஞ்ச் குழுவினர் சந்தித்துப் பேசினர்.
இதுகுறித்து மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக இருந்தது. இருதரப்பும் ஏற்கக்கூடிய வகையில் ஒப்பந்த பேச்சுவார்த்தையை விரைந்து முடிக்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்படும்’ என தெரிவிக்கப்பட்டது. அமெரிக்க வர்த்தக குழு வட்டாரங்கள் தரப்பில், "இந்திய குழுவினர் உடனான பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக அமைந்தது.
இரு நாடுகள் இடையே அடுத்த சுற்று பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும். இந்த பேச்சுவார்த்தையில் வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படும். வரும் நவம்பரில் இரு நாடுகள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகக்கூடும். தற்போது இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தகம் 191 பில்லியன் டாலராக உள்ளது. வரும் 2030-ம் ஆண்டில் இரு நாடுகள் இடையிலான வர்த்தகம் 500 பில்லியன் டாலரை எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது" என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விதித்த 25% வரி, வரும் நவம்பர் மாதத்துக்குப் பிறகு திரும்பப் பெறப்படலாம் என்று தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி. அனந்த நகேஸ்வரன் தெரிவித்துள்ளது கவனிக்கத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT