Published : 18 Sep 2025 07:42 AM
Last Updated : 18 Sep 2025 07:42 AM
புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி பெற்ற பரிசுப் பொருட்களின் ஏல விற்பனை இணையத்தில் தொடங்கியுள்ளது.
இப்பொருட்களின் விலை ரூ.1,700 முதல் 1.03 கோடி வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் வெளிநாட்டுப் பயணங்களில் பிரதமர் நரேந்திர மோடிக்கு பரிசுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. இந்த பரிசுப் பொருட்கள் கடந்த 2019 முதல் அவ்வப்போது ஏலம் விடப்படுகின்றன.
இந்த வகையில் 7-வது ஏல விற்பனை அவரது பிறந்த நாளான நேற்று (செப். 17) www.pmmementos.gov.in என்ற இணையதளத்தில் தொடங்கியது. 1,300-க்கும் மேற்பட்ட பொருட்களுக்கான ஏல விற்பனை அக்டோபர் 2-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த ஏல விற்பனையில் கிடைக்கும் தொகையை தூய்மையான கங்கை திட்டத்துக்கு பிரதமர் நன்கொடையாக வழங்குகிறார். இந்த முறை ஏலத்தில் பாரா ஒலிம்பிக் 2024 வீரர்களின் பரிசுகள், சிலைகள் மற்றும் ஓவியங்கள் அடங்கியுள்ளன. இந்தப் பரிசுகளின் விலை ரூ.1,700-ல் தொடங்கி ரூ.1.03 கோடி வரை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கூறுகையில், “கடந்த 6 ஆண்டுகளில் 7,000-க்கும் மேற்பட்ட பரிசுகள் ஏலத்தில் விடப்பட்டுள்ளன. இதன் மூலம் ரூ.50.33 கோடி திரட்டப்பட்டுள்ளது. இந்தத் தொகை தூய்மையான கங்கை திட்டத்துக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. இந்த முறையும் அவ்வாறே வழங்கப்பட உள்ளது’’ என்றார்.
இந்த முறை ஏல விற்பனையில், விளையாட்டு வீரர்களிடமிருந்து பெறப்பட்ட பரிசுகள், கடவுள் சிலை, ஓவியங்கள், தொப்பிகள், வாள்கள் போன்ற பல பொருட்கள் இடம்பெற்றுள்ளன.
துல்ஜா பவானி சிலை: இதில் துல்ஜா பவானி சிலையின் விலை மிகவும் அதிகம். அதன் அடிப்படை விலை ரூ.1.03 கோடியாக உள்ளது. பாராலிம்பிக்ஸ் 2024-ல் வெள்ளிப் பதக்கம் வென்ற நிஷாத் குமார், வெண்கலப் பதக்கம் வென்ற அஜித் சிங், சிம்ரன் சர்மா ஆகியோரின் காலணிகள் உள்ளன. அவற்றின் அடிப்படை விலை தலா ரூ.7.70 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT