Published : 18 Sep 2025 12:42 AM
Last Updated : 18 Sep 2025 12:42 AM
புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி நேற்று தனது 75-வது பிறந்த நாளைக் கொண்டாடினார். அவருக்கு பல்வேறு நாடுகளின் அதிபர்கள், பிரதமர்கள், ஆன்மிகத் தலைவர்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நேற்று முன்தினம் நள்ளிரவில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த தகவலை பிரதமர் மோடி ட்ரம்புக்கு முன்னதாகவே சமூக வலைதளத்தில் பதிவிட்டுவிட்டார். அதில், “எனக்கு தொலைபேசியில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த என் நண்பர், அதிபர் ட்ரம்புக்கு நன்றி. உங்களைப் போலவே, இருதரப்பு உறவை புதிய உச்சத்துக்கு எடுத்துச் செல்வதற்கு நானும் உறுதியாக இருக்கிறேன். ரஷ்யா-உக்ரைன் போருக்கு அமைதி தீர்வு கிடைக்க வேண்டும் என்ற உங்கள் முயற்சிக்கு எங்கள் ஆதரவு உண்டு" என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “என் நண்பர் பிரதமர் மோடியுடன் சற்று முன்பு தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினேன். அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தேன். அவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். நரேந்திரா, ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர ஆதரவளித்தமைக்கு நன்றி" என பதிவிட்டுள்ளார்.
இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி எக்ஸ் சமூக வலைதளத்தில் பிரதமர் மோடியுடன் ஏற்கெனவே எடுத்துக்கொண்ட செல்பியை பதிவேற்றும் செய்துள்ளார். அத்துடன், “இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். அவரது வலிமை, உறுதிப்பாடு மற்றும் கோடிக்கணக்கான மக்களை வழிநடத்தும் திறன் ஆகியவை உத்வேகம் அளிக்கிறது. இந்தியாவை பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி தொடர்ந்து வழிநடத்தவும், இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்தவும் அவர் ஆரோக்கியமுடன் இருக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், “அன்பு பிரதமர், உங்கள் பிறந்த நாளுக்கான என்னுடைய இதயப்பூர்வமான நல் வாழ்த்துகளை ஏற்றுக் கொள்ளுங்கள். நம் இரு நாடுகளுக்கு இடையிலான கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கும், பல்வேறு துறைகளில் பரஸ்பர நன்மை பயக்கும் இருதரப்பு ஒத்துழைப்பை வளர்ப்பதற்கும் நீங்கள் தனிப்பட்ட முறையில் சிறந்த பங்களிப்பை செய்கிறீர்கள்" எனப் பதிவிட்டுள்ளார்.
இதேபோல, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ், நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லுக்சன், இங்கிலாந்து முன்னாள் பிரதமர் ரிஷி சுனக், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, புத்த மத தலைவர் தலாய் லாமா, மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் உள்ளிட்டோரும் பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT