Published : 17 Sep 2025 07:27 PM
Last Updated : 17 Sep 2025 07:27 PM
புதுடெல்லி: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை பாஜக உறுதியாக ஆதரிப்பதாகத் தெரிவித்துள்ள அமித் ஷா, ஊடுருவியவர்களை பாதுகாக்கவே ராகுல் காந்தி பிஹாரில் யாத்திரை மேற்கொண்டதாகக் குற்றம் சாட்டினார்.
பிரதமர் நரேந்திர மோடியின் 75-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைநகர் டெல்லியில் 101 ஆயுஷ்மான் ஆரோக்கிய நிலையங்களை திறந்து வைத்தார். மேலும், டெல்லி அரசின் ரூ.1,600 கோடி மதிப்பிலான பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய அமித் ஷா, "பாரத அன்னையின் சேவைக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்த பிரதமர் மோடியின் பிறந்த தினத்தை முன்னிட்டு செப்.17 முதல் அக்.2 வரையிலான 15 நாட்களை பாஜக சேவை தினமாகக் கொண்டாடுகிறது. கடந்த 11 ஆண்டுகளாக இவ்வாறு சேவை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
வாக்காளர் பட்டியலை தூய்மைப்படுத்தும் நோக்கில் இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் சிறப்பு தீவிர திருத்தத்தை பாஜக உறுதியாக ஆதரிக்கிறது. வாக்காளர் பட்டியலில் இருந்து ஊடுருவல்காரர்கள் நீக்கப்பட வேண்டும். சட்டவிரோதமாக குடியேறிவர்களை தேர்தல் வெற்றிக்காக ராகுல் காந்தி பாதுகாக்க முயல்கிறார். அதற்காகவே அவர் பிஹாரில் யாத்திரை மேற்கொண்டார். ஊடுருவியவர்கள் நாட்டிலேயே தங்கி இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். ஏனெனில், அவர்களுக்கு சொந்த நாட்டு மக்கள் மீது நம்பிக்கையில்லை. ஊடுவியவர்கள் மூலம் தேர்தலில் வெற்றி பெற அவர்கள் விரும்புகிறார்கள்.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370-ஐ நீக்க வேண்டும் என பாஜக தொண்டர்கள் பல ஆண்டுகளாக காத்திருந்தார்கள். இதற்காக நாங்கள் உரத்து குரல் கொடுத்து வந்தோம். எங்கள் குரல் தெளிவானதாக இருந்தது. பிரதமர் மோடியை நாடு இரண்டாவது முறையாக தேர்ந்தெடுத்ததன் மூலம் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது. பிரதமர் மோடியுடன் பல ஆண்டுகளாக நான் பணியாற்றி வருகிறேன். அவரைப் போல ஒரு நாள்கூட விடுமுறை எடுக்காத நபரை நான் பார்த்ததே இல்லை.
அவரது அயராத உழைப்பின் காரணமாகவே, பிரதமராக இருந்த மன்மோகன் சிங் 11-வது இடத்தில் விட்டுச் சென்ற நாட்டின் பொருளாதாரத்தை பிரதமர் மோடி 4-வது இடத்துக்கு கொண்டு உயர்த்தினார். 2027-க்குள் நமது நாட்டின் பொருளாதாரம் 3வது இடத்துக்கு முன்னேறும்" என தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT