Published : 17 Sep 2025 08:09 AM
Last Updated : 17 Sep 2025 08:09 AM
புதுடெல்லி: இமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், டெல்லி, உத்தராகண்ட் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த சில மாதங்களாக பருவ மழை தீவிரமடைந்துள்ளது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன் மலைப்பாங்கான பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்நிலையில் இமாச்சல பிரதேசத்தின் மண்டி மாவட்டம் தரம்பூர் நகரில் நேற்று முன்தினம் இரவு மேகவெடிப்பு காரணமாக தொடங்கிய கனமழை விடிய விடிய கொட்டித் தீர்த்தது. இதனால் தரம்பூர் பேருந்து நிலையம் வெள்ளத்தில் மூழ்கியது. சில பேருந்துகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. பல பேருந்துகள், கடைகள், நீரேற்று நிலையம் உள்ளிட்டவை சேதமடைந்தன.
இதுபோல நிஹ்ரி பகுதியில் உள்ள ஒரு குன்றிலிருந்து பாறை உருண்டு வந்து ஒரு வீட்டின் மீது விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். 2 பேர் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டனர். இந்த தகவலை மண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாக் ஷி வர்மா தெரிவித்தார். சிம்லா அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் பல வாகனங்கள் புதைந்தன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
உத்தராகண்டின் டேராடூன் நகரிலும் நேற்று முன்தினம் இரவு கனமழை கொட்டியது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஓட்டல்கள், கடைகள், வணிக வளாகங்கள் சேதமடைந்தன. வெள்ளம் காரணமாக சுஹாஸ்த்ரதாரா ஆறு கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் சுஹாஸ்த்ரதாரா சாலையில் உள்ள ஓட்டல்கள், கடைகள் சேதமடைந்துள்ளன.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி பார்வையிட்டார். பின்னர் முதல்வர் தாமி கூறும்போது, “மாநில பேரிடர் மீட்புப் படையினர் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக உள்ளூர் நிர்வாகத்தை அவ்வப்போது தொடர்பு கொண்டு நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறேன்” என்றார்.
இதனிடையே, பிரதமர் நரேந்திர மோடியும் உள் துறை அமைச்சர் அமித் ஷாவும் உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியை தொலைபேசியில் தொடர்புகொண்டு நிலைமையை கேட்டறிந்தனர். மேலும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு தேவையான உதவிகளை செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாக அவர்கள் தாமியிடம் உறுதி அளித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT