Published : 17 Sep 2025 07:19 AM
Last Updated : 17 Sep 2025 07:19 AM
புதுடெல்லி: ஐஆர்சிடிசி தளத்தில் ஆதார் எண்ணை பதிவு செய்த பயணிகள் மட்டுமே முதல் 15 நிமிடங்கள் ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்ய முடியும். தினமும் அதிகாலை 12.20 மணி முதல் இரவு 11.45 மணி வரை ரயில் டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம். தட்கல் டிக்கெட்டுகளை பொறுத்தவரை ஏசி பெட்டிகளுக்கு காலை 10 மணிக்கும், ஏசி அல்லாத பெட்டிகளுக்கு காலை 11 மணிக்கும் ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது.
கடந்த ஜூலையில் தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டது. இதன்மூலம் தட்கல் ரயில் டிக்கெட்டில் முறைகேடுகள் தடுக்கப்பட்டு உள்ளன. தற்போது 60 நாட்களுக்கு முன்பாக சாதாரண ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்யும் நடைமுறை அமலில் உள்ளது.
ஆனால் பெரும்பாலான விரைவு ரயில்களுக்கான டிக்கெட்டுகள் சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்து விடுகின்றன. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. குறிப்பாக போலி ஐஆர்சிடிசி கணக்குகள், சிறப்பு மென்பொருள் மூலம் விரைவு ரயில்களில் முறைகேடாக டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுவதாக குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதுகுறித்து ரயில்வே அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரயில் டிக்கெட் முன்பதிவில் முறைகேடுகளை தடுக்க அக்டோபர் 1 முதல் புதிய நடைமுறை அமல் செய்யப்பட உள்ளது. இதன்படி ஐஆர்சிடிசி இணையதளம், செயலியில் ஆதார் எண் சரிசார்ப்பு மூலம் டிக்கெட் வழங்கும் நடைமுறை அமலுக்கு வருகிறது.
ஆதார் எண்ணை பதிவு செய்த பயணிகள் மட்டுமே முதல் 15 நிமிடங்கள் ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்ய முடியும். இதர பயணிகள் 15 நிமிடங்களுக்கு பிறகு டிக்கெட் முன்பதிவு செய்ய அனுமதிக்கப்படுவர். இவ்வாறு ரயில்வே அமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ரயில்வே வட்டாரங்கள் கூறியதாவது: பொதுமக்கள் ஆதாரை பதிவு செய்ய ஐஆர்சிடிசி இணையம், செயலியில் எனது கணக்கு (My account) தளத்தில் சரிபார்ப்பு (Authenticate user) பகுதியை கிளிக் செய்ய வேண்டும். இதன்பிறகு ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும். உங்களது செல்போன் எண்ணுக்கு பாஸ்வேர்டு வரும். அந்த பாஸ்வேர்டை உள்ளீடு செய்ய வேண்டும்.
ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்களுக்கு நேரில் செல்பவர்கள் ஆதார் எண்ணை அளிக்க வேண்டும். அவர்களின் மொபைல் போனுக்கு பாஸ்வேர்டு வரும். அதை உள்ளீடு செய்து ரயில் டிக்கெட்டை பெறலாம். புதிய நடைமுறையில் எழும் குறைபாடுகள் பின்னர் களையப்படும். இவ்வாறு ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT