Published : 16 Sep 2025 03:47 PM
Last Updated : 16 Sep 2025 03:47 PM
இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 14 அன்று இந்தி தினமாகக் கொண்டாடப்படுகிறது. ‘இந்தி திவாஸ்’ என்று அழைக்கப்படும் இந்நிகழ்வையொட்டி இந்தித் திணிப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபடுவதாகத் தெரிவித்து, கொல்கத்தாவைச் சேர்ந்த பங்களா போக்கோ (Bangla Pokkho) என்கிற அமைப்புப் போராட்டம் நடத்தியது.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இந்தப் பங்களா போக்கோ - பண்பாடு, மொழி உரிமைக்காகச் செயல்படும் ஓர் அமைப்பு. இந்த ஆண்டு செப்டம்பர் 14 நடைபெற்ற போராட்டத்துக்கு, பங்களா போக்கோ அமைப்பு தலைமை ஏற்று ஒருங்கிணைத்தது. கொல்கத்தாவின் ஜாதவ்பூர் சுலேகா சந்திப்பில் தொடங்கிய போராட்டப் பேரணி கரியாஹட் சந்திப்பு வரை நீடித்தது. பேரணியின்போது ‘இந்தித் திணிப்பு எதிர்ப்பு’, ‘மொழி சமத்துவம் வேண்டும்’ போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளைப் போராட்டக்காரர்கள் ஏந்திச் சென்றனர். பங்களா மொழிக்காக மட்டுமன்றி, அனைத்து இந்தி அல்லாத மொழிகளின் உரிமையைக் காக்கவே இந்தப் போராட்டம் எனப் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
மத்திய அரசின் ‘இந்தி தினம்’ கொண்டாட்டம் இந்தியாவின் பன்மொழித்தன்மையைப் பாதிக்கிறது எனவும் அனைத்து இந்திய மொழிகளுக்கும் சமமான அரசியல் அதிகாரம், நிதி ஒதுக்கீடு, அங்கீகாரம், வளர்ச்சிக்கான திட்டங்கள் ஆகியவை வழங்கப்பட வேண்டும் எனவும் பங்களா போக்கோ அமைப்பின் பொதுச் செயலாளர் கர்கா சாட்டர்ஜி தெரிவித்தார். முக்கியமான மத்திய அரசுத் தேர்வுகள், அறிவிப்புகள், அரசு - பொதுத் துறை நிறுவனங்களின் இணையதளங்கள், சேவைகள் அனைத்தும் இந்தியாவின் பிற அட்டவணை மொழிகளிலும் கிடைக்கப்பட வேண்டும் என்றும் மொழி திணிப்பை நிறுத்த வேண்டும் என்றும் இந்தப் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT