Published : 16 Sep 2025 12:35 PM
Last Updated : 16 Sep 2025 12:35 PM
புதுடெல்லி: அசாம் முதல்வரின் சிறப்பு விஜிலென்ஸ் பிரிவு அதிகாரி நுபுர் போரா வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. இதில், ரூ.1 கோடி ரொக்கம், தங்கநகைகளை பறிமுதல் செய்து, அப்பெண் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
பாஜக ஆளும் அசாமில் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, முதலமைச்சரின் சிறப்பு விஜிலென்ஸ் பிரிவு அதிகாரி நுபுர் போராவின் வீட்டில் சோதனை நடத்தியது. இவர், அசாம் சிவில் சர்வீசஸ் (ஏசிஎஸ்) அதிகாரியாகப் பணியாற்றுபவர்.
இவரது வீட்டில் நேற்று இரவு, நடந்த திடீர் சோதனையில் சுமார் ரூ.90 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ.1 கோடிக்கு மேல் மதிப்புள்ள தங்க நகைகளை பறிமுதல் செய்யப்பட்டன. மீட்கப்பட்ட மொத்த மதிப்பு சுமார் ரூ.2 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த பெண் அதிகாரியான நுபுர் போரா கடந்த ஆறு மாதங்களாக கண்காணிக்கப்பட்டு வந்தார். இதன் பின்னணியில், அவர் தனது பதவிக் காலத்தில் சட்டவிரோதமாக பெரும் சொத்துக்களை ஈட்டியதாகக் கூறப்படுகிறது.
முதல்வரின் விசாரணை அதிகாரிகள் அளித்த தகவல்களின்படி, பர்பேட்டா மாவட்டத்தில் வட்ட அதிகாரியாக நுபுர் போரா இருந்துள்ளார். அப்போது அவர், சந்தேகத்திற்குரிய ஊடுருவல்காரர்களின் பெயரில் அரசாங்க நிலங்களை சட்டவிரோதமாகப் பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது. இப்பெண் அதிகாரிக்கு உடந்தையாக இருந்த அலுவலர்கள் மீதும் கடும் நடவடிக்கை துவங்கி விட்டது.
இதில் ஒருவரான பாக்பர் வருவாய் வட்டத்தைச் சேர்ந்த மண்டல அதிகாரியான சுராஜித் தேகா சிக்கியுள்ளார். சுராஜித் தேகாவின் பல மாடி வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. இவரும் தன் வருமான அளவுக்கு அதிகமாக சொத்துக்களை குவித்ததாகவும், பல நிலங்களை வாங்கியதாகவும் தேகா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதுவரை கிடைத்த ஆதாரங்களின்படி, தேகாவும், நுபுர் போராவுடன் இணைந்து சட்டவிரோதமாக இந்த சொத்துக்களை வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த நடவடிக்கை அசாமின் பல இடங்களில் தொடர்ந்து வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT