Published : 16 Sep 2025 11:27 AM
Last Updated : 16 Sep 2025 11:27 AM
புதுடெல்லி: பிஹாரின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) மீதான வழக்கு உச்ச நீதிமன்ற விசாரணையில் உள்ளது. இச்சூழலில் டெல்லியிலும் இந்த எஸ்ஐஆர் பணி துவங்கி விட்டது.
தலைமை தேர்தல் ஆணையத்தினால் பிஹாரில் அமலான எஸ்ஐஆர் சர்ச்சைக்கு உள்ளானது. இது வாக்காளர் பட்டியலை மிகவும் துல்லியமாகவும் வெளிப்படையாகவும் மாற்றி, புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் கூறுகிறது.
இந்நிலையில், பிஹாரை அடுத்து துல்லியம் மற்றும் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க நாட்டின் தலைநகரிலும் எஸ்ஐஆர் துவங்கி உள்ளது. இது குறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் வட்டாரங்கள் கூறும்போது, ‘இதற்கான தேதி இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை என்றாலும், செயல்முறைக்கான அடிப்படை பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளன.
இதை அமலாக்க எங்கள் ஆணைய அலுவலர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கானக் காலியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. பூத் நிலை அலுவலர்களுக்கு (பிஎல்ஓ) பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. வாக்குச் சாவடிகளை மறுசீரமைத்து, பதிவுகளை சரிசெய்வதற்கான பணிகளும் நடந்து வருகின்றன. செயல்முறை தொடங்கியதும் எஸ்ஐஆர் டெல்லியிலும் விரைவாக செயல்படுத்தப்படும்.
வாக்காளர் பட்டியலில் உள்ள குறைபாடுகளை நீக்குவதற்கும், டெல்லியில் அடுத்த தேர்தலுக்கு முன்பு புதிய வாக்காளர்களைச் சேர்ப்பதற்கும் இந்த நடவடிக்கை முக்கியமானதாக இருக்கும்’ எனத் தெரிவித்தனர்.
வரும் அக்டோபரில் பிஹார் சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு சற்று முன்பாக, அம்மாநிலத்தில் சிறப்பு தீவிர திருத்தம் நடத்தப்பட்டது. இது, எதிர்க்கட்சிகளால் பெரும் அரசியல் விவாதத்திற்கு வழிவகுத்தது. இதில், 2003 க்குப் பிறகு வாக்காளர் பட்டியல் மதிப்பாய்வு செய்யப்பட்டு மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 7.9 கோடியிலிருந்து 7.24 கோடியாகக் குறைந்தது.
தேர்தல் ஆணையத்தின் முதல் பெரிய இந்த நடவடிக்கையின் மீது பல்வேறு கேள்விகள் எழுந்தன. இது மக்களின் வாக்களிக்கும் உரிமையைப் பறிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
இதற்கு, தகுதியான வாக்காளர்களை பட்டியலில் சேர்ப்பதற்கும், தகுதியற்ற பெயர்களை நீக்குவதற்கும் மட்டுமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் பதிலளித்திருந்தது. எனினும், இதன் மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணை நடைபெறுகிறது. இதன் மீதான இறுதி வாதம் அக்டோபர் 7 இல் துவங்குகிறது.
இந்நிலையில், டெல்லியிலும் துவங்கும் எஸ்ஐஆர் பணியால் சர்ச்சைகள் கிளம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லியின் தலைமைத் தேர்தல் அதிகாரி வெளியிட்ட 2025 இன் தரவுகளின்படி, தலைநகரில் தற்போது மொத்தம் 1,55,24,858 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 83,49,645 ஆண்கள், 71,73,952 பெண்கள் மற்றும் 1,261 மூன்றாம் பாலின வாக்காளர்கள் அடங்குவர்.
டெல்லியில் தற்போது சட்டப்பேரவை தேர்தல் எதுவும் நடைபெறவில்லை. எனினும், சரியான நேரத்தில் அதற்காக முன்கூட்டியே தயாராக இருப்பது முக்கியம் என தேர்தல் ஆணையம் கருதுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT