Published : 16 Sep 2025 09:20 AM
Last Updated : 16 Sep 2025 09:20 AM
ஜம்மு: ஆயுதங்களை கடத்தியதாக ராணுவத்தைச் சேர்ந்த 3 சுமைதூக்கும் நபர்களை ஜம்மு-காஷ்மீர் போலீஸார் கைது செய்துள்ளனர். ராணுவ வீரர்களுக்கு உதவுவதற்காக மாத சம்பள அடிப்படையில் சுமை தூக்கும் நபர்களை ராணுவ அதிகாரிகள் தற்காலிகமாக பணியமர்த்தி வருகின்றனர்.
இந்த சுமை தூக்கும் நபர்கள் சிக்கலான மலைப்பாதை, பனிமலைகளில் ராணுவ வீரர்களுக்கு உதவியாக இருப்பர். ராணுவ வீரர்களுக்குத் தேவையான பொருட்களை மலைப்பகுதிகள் உள்ளிட்ட இடங்களுக்கு சுமந்து சென்று உதவி செய்வர்.
இந்நிலையில் ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டம் மண்டி பகுதியில் ராணுவத்துக்குச் சொந்தமான ஆயுதங்களை கடத்தியதாக 3 சுமை தூக்கும் நபர்களை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 3 ஏகே-47 ரக துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். 2 வாரங்களுக்கு முன்பு இதுபோன்று 4 ஏகே-47 ரக துப்பாக்கிகள் சுமை தூக்கும் நபர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டிருந்தது. அஸாமாபாத்தைச் சேர்ந்த தாரிக் ஷேக், சேம்பர் பகுதியைச் சேர்ந்த ரியாஸ் அகமது, முகமது ஷபி ஆகியோர் கைதானவர்கள்.
இதுகுறித்து போலீஸ் ஐஜி (ஜம்மு மண்டலம்) பீம்சென் துட்டி கூறும்போது, “ஆயுதங்களைக் கடத்தியதாக சுமை தூக்கும் நபர்களை கைது செய்துள்ளோம். அவர்களிடமிருந்து இதுவரை 7 ஏகே-47 ரக துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் இந்தக் கடத்தல் சம்பவம் நடந்துள்ளது" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT