Published : 16 Sep 2025 08:47 AM
Last Updated : 16 Sep 2025 08:47 AM
இந்தூர்: மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பிரபல ஷீதலா மாதா மார்க்கெட் உள்ளது. இங்கு பெண்களுக்கான ஆடைகள் மொத்தமாக விற்கப்படுகின்றன. இந்தியா மட்டுமன்றி சர்வதேச அளவில் இந்த மார்க்கெட் பிரபலமாக உள்ளது. இங்கு 501 கடைகள் உள்ளன. சமீபத்தில் இந்த மார்க்கெட் செயல்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது.
அதில் உள்ளூர் பாஜக தலைவரும் எம்எல்ஏ மகனுமான ஏகலைவா சிங் கவுர் பங்கேற்றுள்ளார். கூட்டத்தில் அவர் பேசும்போது, ‘‘ஷீதலா மாதா மார்க்கெட்டில் உள்ள 501 கடைகளிலும் முஸ்லிம் விற்பனையாளர்களுக்கு அனுமதி இல்லை’’ என்று உத்தரவிட்டுள்ளார்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. எனினும், ‘லவ் ஜிகாத்’தை தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால், மார்க்கெட்டில் பல ஆண்டுகளாக வேலை செய்து வரும் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் பீதியில் உள்ளனர்.
இதுகுறித்து ஷீதலா மாதா மார்க்கெட் பொதுச் செயலர் பப்பு மகேஸ்வரி கூறும்போது, ‘‘சமீபத்தில் மார்க்கெட்டில் கூட்டம் நடைபெற்றது உண்மை. அப்போது எடுக்கப்பட்ட முடிவையும் நாங்கள் ஏற்றுக் கொண்டுள்ளோம். ஷீதலா மாதா மார்க்கெட்டில் வேலை செய்யும் முஸ்லிம் இளைஞர்கள் அனைவரும் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. வாடகைக்கு உள்ள முஸ்லிம் கடைகளையும் காலி செய்ய கூறியிருக்கிறோம். அவர்களுக்கு 2 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது’’ என்றார்.
அதேநேரத்தில், ‘‘மார்க்கெட்டில் முஸ்லிம் பெண்கள் வந்து ஆடை வகைகளை வாங்கிக் கொள்ளலாம். அவர்களுக்கு எந்த பாரபட்சமும் பார்க்க மாட்டோம்’’ என்று பப்பு கூறியுள்ளார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. மார்க்கெட்டில் துணிகளை வாங்குபவர்களாக முஸ்லிம் பெண்கள் வரலாம். ஆனால், விற்பவர்களாக முஸ்லிம் இளைஞர்கள் இருக்க கூடாதா?’’ என்று விமர்சனம் எழுந்துள்ளது.
இதுகுறித்து இந்தூர் காங்கிரஸ் தலைவர் சிண்டு சவுக்சே கூறும்போது, ‘‘மதம், சமூகம், ஜாதி அடிப்படையில் மக்கள் சண்டை போட வேண்டும் என்பது ஒன்றுதான் பாஜக.வின் நோக்கம். இந்து, முஸ்லிம், சீக்கியர், கிறிஸ்தவர் என அனைவருக்கும் இந்தியாவில் சம உரிமை உள்ளது.
எனவே, இந்த விஷயத்தில் இந்தூர் மாவட்ட ஆட்சியர், போலீஸ் ஆணையர் ஆகியோர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால், இந்தூரில் மாபெரும் எதிர்ப்பு போராட்டத்தை காங்கிரஸ் நடத்தும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT