Published : 15 Sep 2025 03:49 PM
Last Updated : 15 Sep 2025 03:49 PM
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு முதல் இடைவிடாமல் பெய்த கனமழையால் நகரம் முழுவதும் பரவலாக தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் பெரிய அளவில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. மேலும், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 3 பேர் காணாமல் போயுள்ளனர்.
நேற்று (செப்டம்பர் 14) காலை 8.30 மணி முதல் இன்று (செப். 15) காலை 8.00 மணி வரை ஹைதராபாத் சித்திபேட்டையின் நாராயண்ராவ்பேட்டையில் அதிகபட்சமாக 245.5 மிமீ மழை பதிவாகியுள்ளது. ரங்காரெட்டியின் அப்துல்லாபூர்மெட் - ததியனாரம் பகுதியில் 128 மிமீ மழை பெய்துள்ளது, அதே நேரத்தில் ஹைதராபாத்தின் முஷீராபாத் பகுதியில் 114.5 மிமீ முதல் 124 மிமீ வரை மழை பெய்துள்ளது.
திடீரென பெய்த கனமழை காரணமாக ஹைதராபாத் சாலைகளில் ஆறுபோல மழை நீர் ஓடுகிறது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத் மாநகராட்சி மேயர் விஜயலட்சுமி கட்வால், பஞ்சாரா ஹில்ஸில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் நிலைமையை மேற்பார்வையிட்டு வருவதாக கூறினார். அங்கு மழைநீரை வெளியேற்றவும், போக்குவரத்தை சீர்படுத்தவும் நடவடிக்கை எடுக்கும் குழுக்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில், பார்சிகுட்டாவில் 44-வது பேருந்து நிறுத்தம் அருகே வடிகால் சுவர் இடிந்து விழுந்ததில் சன்னி என்ற நபர் மழை நீரில் அடித்துச் செல்லப்பட்டார். அவரது ஸ்கூட்டர் பார்சிகுட்டா தேவாலயம் அருகே மீட்கப்பட்டது. பேரிடர் மீட்புப் படையினர் வடிகாலில் உள்ள சாக்கடை குழிகளில் தேடி வருகின்றனர், ஆனால் அவர் இன்னும் கிடைக்கவில்லை.
மற்றொரு சம்பவத்தில், நம்பள்ளி பகுதியில் 26 வயதான அர்ஜுன் மற்றும் 28 வயதான ராமா ஆகிய இருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் களமிறங்கியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT