Published : 14 Sep 2025 12:35 AM
Last Updated : 14 Sep 2025 12:35 AM
இம்பால்: மணிப்பூர் மக்கள், அமைப்புகள் அமைதிப் பாதைக்கு திரும்ப வேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
மணிப்பூரில் கடந்த 2023 மே மாதம் மைதேயி - குகி சமுதாயங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதன்காரணமாக மாநிலம் முழுவதும் கலவரம் வெடித்தது. இதில் 258 பேர் உயிரிழந்தனர். 1,108 பேர் காயமடைந்தனர். 400 தேவாலயங்கள், 132 இந்து கோயில்கள் சேதப்படுத்தப்பட்டன. 60,000-க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்தனர். மணிப்பூரில் சுமார் 2 ஆண்டுகளுக்கும் மேலாக வன்முறை நீடித்தது.
இந்த சூழலில் கடந்த 4-ம் தேதி குகி சமுதாயத்தின் நிர்வாக குழுவான குகி சோ கவுன்சில், மைதேயி சமுதாயத்தை சேர்ந்த ஐக்கிய மக்கள் முன்னணியின் மூத்த நிர்வாகிகளுடன் மத்திய உள்துறை அமைச்சக மூத்த அதிகாரிகள் டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குகி - மைதேயி குழுக்கள் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. மணிப்பூரில் தடையற்ற வர்த்தக போக்குவரத்தை உறுதி செய்ய இருதரப்பினரும் உறுதி அளித்தனர்.
ரூ.7,300 கோடி திட்டங்கள்: இந்த சூழலில் பிரதமர் மோடி அரசுமுறை பயணமாக நேற்று மணிப்பூர் சென்றார். கலவரத்தின் மையமாக இருந்த சூரசந்த்பூரில் நடைபெற்ற விழாவில் ரூ.7,300 கோடி மதிப்பில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். சில திட்டங்களை தொடங்கிவைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது: மணிப்பூர் மக்களுக்கு தலைவணங்கி மரியாதை செலுத்துகிறேன். கடந்த 2014-ம் ஆண்டுக்கு பிறகு மணிப்பூரின் வளர்ச்சியில் மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. மணிப்பூர் என்பது நம்பிக்கையின் பூமி. எதிர்பாராதவிதமாக இங்கு வன்முறை ஏற்பட்டது. இதில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தேன். அப்போது மணிப்பூரில் புதிய விடியல் பிறக்கும் என்று உறுதி அளித்தேன்.
ஒரு காலத்தில் வடகிழக்கு மாநிலங்களில் தீவிரவாத பிரச்சினை நீடித்தது. இதனால் வடகிழக்கின் வளர்ச்சி பாதிக்கப்பட்டது. பிறகு, வடகிழக்கு அமைதிப் பாதைக்கு திரும்பியது. இப்போது ஒட்டுமொத்த பிராந்தியமும் அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.அதேபோல, மணிப்பூர் மக்கள்,அமைப்புகள் அமைதிப் பாதைக்கு திரும்ப வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறேன். உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக, அவர்களது கனவுகளை பூர்த்தி செய்ய மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட வேண்டும். நான் உங்களோடு இருக்கிறேன். மத்திய அரசு மணிப்பூர் மக்களோடு இருக்கிறது என்று உறுதி அளிக்கிறேன்.
வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரை மீண்டும் வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல மத்திய அரசு அனைத்து நடவடிக்கையும் எடுக்கும். வன்முறையில் வீடுகளை இழந்தோருக்கு 7,000 வீடுகள் கட்டித் தரப்படும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ ரூ.500 கோடியில் சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும். அமைதி,வளம், செழுமையின் சின்னமாக மணிப்பூர் உருவெடுக்கும். இவ்வாறு பிரதமர் பேசினார்.
சூரசந்த்பூரில் நிவாரண முகாமில் தங்கியுள்ள மக்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது ஒரு சிறுமி, பிரதமர் மோடியின் படத்தை பரிசாக வழங்கினார். பேசும்போது சில பெண்கள் கண்ணீர்விட்டு அழுதனர். அவர்களை பிரதமர் மோடி தேற்றினார். மணிப்பூரில் புதிய விடியல் பிறக்கும் என்று அவர் உறுதி அளித்தார்.பின்னர், தலைநகர் இம்பாலுக்கு சென்ற பிரதமர் அங்கு ரூ.1,200 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
நேபாள பிரதமர் சுசீலாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து: இளைஞர்களின் போராட்டம் காரணமாக நேபாளத்தில் பிரதமர் சர்மா ஒலி தலைமையிலான அரசு கவிழ்ந்தது. அந்த நாட்டின் இடைக்கால பிரதமராக உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கி நேற்று முன்தினம் பதவியேற்றார்.
இதுகுறித்து மணிப்பூர் தலைநகர் இம்பாலில் பிரதமர் மோடி பேசியதாவது: இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடு நேபாளம். இரு நாடுகளுக்கும் இடையே வரலாற்று ரீதியான தொடர்புகள் உள்ளன. அந்த நாட்டின்இடைக்கால பிரதமராக சுசீலா கார்கி பதவியேற்றுள்ளார். 140 கோடி இந்தியர்கள் சார்பில் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நேபாளத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை, வளம் திரும்ப அவர் நடவடிக்கை எடுப்பார். பெண்கள் சக்தியின் உதாரணமாக சுசீலா விளங்குகிறார். வன்முறையை கைவிட்டு ஜனநாயக மரபுகளை காக்கும் நேபாள மக்களை வாழ்த்துகிறேன். இவ்வாறு பிரதமர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT