Last Updated : 13 Sep, 2025 05:35 PM

1  

Published : 13 Sep 2025 05:35 PM
Last Updated : 13 Sep 2025 05:35 PM

இந்தியா - பாக். கிரிக்கெட் போட்டிக்கு ஆம் ஆத்மி எதிர்ப்பு: டெல்லியில் திரையிடும் கிளப்களுக்கு எச்சரிக்கை

புதுடெல்லி: இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்கு ஆம் ஆத்மி கட்சி எதிர்ப்புத் தெரிவித்தது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களை மத்திய அரசு அவமானப்படுத்துவதாக டெல்லி பிரிவுத் தலைவர் சவுரப் பரத்வாஜ் குற்றம்சாட்டினார்.

ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் விளையாடும் போட்டி நாளை துபாயில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் வலுத்து வருகிறது. இந்தப் போட்டிக்கு எதிராக மகாராஷ்டிரா முழுவதும் போராட்டங்கள் நடத்தப்படும் என்று சிவசேனா (யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.

இந்தச் சூழலில், ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘பாகிஸ்தானுடன் ஒரு போட்டியை ஏற்பாடு செய்ய வேண்டிய அவசியம் என்ன? இந்தப் போட்டி நடக்கக் கூடாது என்று முழு நாடும் கூறுகிறது. பிறகு ஏன் இந்தப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது? இதுவும் ட்ரம்ப்பின் அழுத்தத்தின் கீழ் செய்யப்படுகிறதா? நீங்கள் ட்ரம்ப்புக்கு எவ்வளவுதான் தலைவணங்குவீர்கள்?’ என்று பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பினார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் ஆபரேஷன் சிந்தூரை கேலி செய்த சித்தரிப்பை பகிர்ந்துள்ள ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி தலைவர் சவுரப் பரத்வாஜ், ‘பஹல்காம் தாக்குதலில் கணவர்களை இழந்த நமது பெண்களுக்கு இது மிகப் பெரிய அவமானம். ஆனாலும் நமது மத்திய அரசு இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியைத் தொடர்ந்து நடத்தி வருகிறது. எனவே, இந்தியா - பாகிஸ்தான் போட்டியை தடை செய்ய வேண்டும். இந்தப் போட்டிகளை திரையிடும் கிளப்கள், பப்கள் மற்றும் உணவகங்களை ஆம் ஆத்மி தொண்டர்கள் எதிர்ப்பார்கள். மக்கள் அந்த கிளப்களுக்கு செல்லக் கூடாது.

பாகிஸ்தானின் கிரிக்கெட் வீரர்கள் நம் நாட்டின் பெண்களை மிகவும் மோசமான, அருவருப்பான முறையில் கேலி செய்கிறார்கள். ஆனால், நாம் அவர்களுடன் கிரிக்கெட் விளையாட வேண்டுமா? இது பாஜக அரசுக்கு அவமானம்" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x